கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 12 ஜனவரி, 2011

செவ்வாய் தோஷம்!

திருமண வரன் பார்க்க ஆரம்பித்தவுடனே எல்லாரும் அடிக்கடி அதிகமா பேசற விஷயம் இந்த செவ்வாய் தோஷம் தான் என்றால் அது மிகையாகாது. மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷமாமே? பொண்ணுக்கு செவ்வாய் தோஷமாமே? அப்படின்னு குடும்பத்திலேயும் அக்கம் பக்கத்திலேயும் பேசிக்கிறதை நாம நல்லாவே கேட்டு இருப்போம். ஏன் 1980களில் இந்த செவ்வாய் தோஷத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படமே வந்து மக்கள் மனதில் ஒரு விதை மாதிரி விதைத்திட்டு போச்சுன்னு கூட சொல்லாம். ஏன் இந்த செவ்வாய் தோஷத்துக்கு இவ்வளவு பில்ட்டப்? யார் இந்த செவ்வாய்? மனிதனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்? செவ்வாய் தோஷம்ன்ன என்ன? செவ்வாய் தோஷம் இருக்கிற பொண்ணை கட்டினால் என்ன நடந்து விட போகிறது? செவ்வாய் தோஷம் இருக்கிறவங்களுக்கு ஏன் அவ்வளவு எளிதில் திருமணங்கள் நடப்பதில்லை? இந்த தோஷத்துக்கு பரிகாரமே கிடையாதா? இப்படி பல கேள்விகள் மனதில் நிறைய பேருக்கு எழுந்திருக்கும். இதற்கெல்லாம் ஒரு விடை காணும் ஒரு முயற்சியாக இந்த பதிவு இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.


முதலில் செவ்வாயைப் பற்றி சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். செவ்வாய் ஒரு சிவந்த கிரகம். இதுவும் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கிற ஒரு கிரகம். அதே போல பூமிக்கும் மிக அருகில் இருக்கிற ஒரு கிரகம். அதன் இயல்பிலேயே சிவந்த நிறமுடன் இருப்பதாலேயே அதற்கு செவ்வாய் என்ற பெயர். இந்த செவ்வாய் என்ற பெயர் என்று சூட்டப்பட்டிருக்கும் என்று நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியாது. இந்த கலையே நம் முன்னோர்கள் அருளியது. பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது இந்த கலை. ஆனால் நேற்று வந்த வெளிநாட்டுக்காரன் நாம ஜோதிடத்தல சொன்னதெல்லாம் சரியா இருக்கான்னு டெலஸ்கோப்பில சரிபார்த்துட்டு இப்ப அவன் கண்டுபிடிச்சதுன்னு அவன் பெயரை வைத்து கொள்கிறான். சரி அந்த விஷயத்தைப் பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.

இந்த சிவந்த கிரகத்தை ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று ஒரு சிறப்போடு அழைப்பதுண்டு. ஒவ்வொரு கிரகதிற்கும் ஒரு காரகத்துவம் உண்டு. அந்த வகையில் இந்த கிரகம் பூமிக்கு காரகம் பெற்ற கிரகம். இந்த பூமிக்காரகனுக்கும் திருமண பந்ததிற்கும் என்ன தொடர்பு? ஒரு கிரகம் பல காரகத்துவங்களைப் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த செவ்வாயும் பலக் காரகத்துவங்களைப் பெற்றே உள்ளது. செவ்வாய்க்கு பார்வைகளும் உண்டு. பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. அதே போல் செவ்வாய்க்கும் 4 மற்றும் 7-ஆம் பார்வைகள் உண்டு.


செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஒரு ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,7,8,12 வீடுகளில் செவ்வாய் அமையப் பெற்றால் அந்த ஜாதகத்தைப் பொதுவாக செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் என்று சொல்வார்கள். இது தான் ஜோதிட உலகில் பொது விதி. இந்த ஒற்றை விதியை மட்டுமே வைத்துக் கொண்டு இன்றைய காலத்தில் பெரும்பாலான அரைகுறை ஜோதிடர்கள் உங்கள் மகன் (அ) மகளுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதென்று சொல்லி விடுகிறார்கள். அதற்குபிறகு தான் அவர்களுடைய மகன் (அ) மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் அவர்கள் படும்பாடு பெரும்பாடாகிவிடுகின்றது. செவ்வாய் தோஷமுள்ள பெண்ணையோ (அ) ஆணையோ தான் கட்ட வேண்டுமென்றும் சொல்லிவிடுகின்றனர். உன் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இந்த பையனைக் கட்டினால் உன் பொண்ணுக்கு தாலி தங்காதுன்னு பயமுறுத்தி விடுகின்றனர். தாலி தங்காதுன்னு ஒரு மரண பயத்தைக் காட்டியதால் தான் இந்த செவ்வாய் தோஷம் பிரபலமடைந்திருக்க வேண்டும்ன்னு நான் நினைக்கிறேன். சமானிய மக்களிடம் ஜோதிட அறிவு என்பது பெரும்பாலும் இருப்பது கிடையாது. இதனை எதிர்பார்க்கவும் முடியாது. அப்படி இருக்கையில் அவர்கள் நாடி செல்லும் இடம் என்பது ஜோதிடர்களின் வீடாகத் தான் இருக்க முடியும். அங்ஙனம் இருக்கையில் ஜோதிடர்களின் பங்கு என்பது இங்கு நிறையவே இருக்கின்றது. ஒரு நல்ல ஜோதிடன் தன்னை நாடி வரும் மனிதனின் மனநிலையை அறிந்து பலன்களை சொல்ல வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அரைகுறை ஜோதிடர்களின் தவறான அணுகுமுறையினால் தான் பல தவறான கருத்துக்கள் மக்கள் மனதில் வேரூன்ற காரணமாகும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.


செவ்வாய் தோஷமும் மூடநம்பிக்கையும்.
பொதுவான ஒரு மூடநம்பிக்கை என்னன்னா செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை கட்டினாலே யாராவது ஒருத்தர் செத்துவிடுவாங்க அப்படி என்றது தான் பலபேருடைய மனசில பதிந்திருக்கிற விஷயமா இருக்கு. அதனாலேயே செவ்வாய் தோஷமா அந்த ஜாதகம் வேண்டாம்ப்பா என்று சொல்கிற மனப்பான்மை நிறைய பேரிடம் உள்ளது. ஒரு ஜாதகரின் கணவனோ (அ) மனைவியோ இறந்துபோவாங்கன்னா அதுக்கு அந்த ஜாதகத்தின் கிரக அமைப்பினை நன்றாக ஆராய வேண்டும். அப்படியே ஒரேடியா சொல்லிட கூடாது செவ்வாய் தோஷத்தால தான் தாலி அறுந்து போச்சுன்னு. ஒவ்வொரு ஜாதகத்தோட ஏழாமிடத்திற்கு எட்டாமிடம் தான் தனக்கு வரப் போகிற கணவன் (அ) மனைவியின் ஆயுள் பலத்தை தீர்மானிக்கிறது.  மேலும் தனித்தனியே ஜாதகரின் ஆயுள் பலத்தினை கணிக்க முடியும். இதையெல்லாம் கணித்தப் பிறகே ஆயுள் பலத்திற்கான முடிவிற்கு வர வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்ன தான் பண்ணும்?
செவ்வாய் தோஷம் லக்னத்திற்கு எந்த இடத்தில் அமைகிறது மற்றும் அது சேர்ந்திருக்கும் கிரகங்கள், அது இருக்கும் வீட்டின் உச்ச, ஆட்சி, நீச்ச, பகை வீடுகளைப் பொருத்தே இந்த செவ்வாய் தோஷம் என்ன பண்ணும்  என்பதை அறுதியிட்டு கூற முடியும்.  ஒவ்வொரு ஜாதகத்திற்கும் கிரக சேர்க்கைகளும் அதனால் ஏற்படுகின்ற கூட்டு பலன்களும் மாறும். பொதுவாக சொல்லனும்னா இந்த செவ்வாய் தோஷம் என்பது ஒரு திருமண பந்தத்திற்கு முக்கியமான தாம்பத்திய உறவின் பலத்தை தீர்மானிக்கிறது. தாம்பத்திய உறவின் விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்கிறது என்றும் கூட சொல்லலாம். அதவாவது கணவனிற்கு செக்ஸில் அதிக ஈடுபாடு இருக்கும் மனைவிக்கு அவ்வளவா விருப்பமே இருக்காது அல்லது மனைவிக்கு அதிக விருப்பம் இருக்கும் ஆனால் கணவனுக்கு இருக்காது. இப்படி வெவ்வேறு தாம்பத்திய பலமுள்ள ஆணும் பெண்ணும் சேரும் போது அந்த திருமணப் பந்தம் முறிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. ஜோதிடத்தில் எல்லாமே சூட்சகமாகத்தான் சொல்லப் பட்டிருக்கும்ன்னு நான் அடிக்கடி சொல்வதுண்டு. உதாரணத்திற்கு, ஒரு ஆணிடமோ பெண்ணிடமோ உனக்கு செக்ஸ்ல எவ்வளவு விருப்பமிருக்கு என்பதை நேரிடையாக சமுதாயத்தில் கேட்க முடியுமா? இந்த மாதிரியான அந்தரங்க விஷயங்களை கூட தெரிந்து கொண்டு திருமணப் பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பதினுடைய சாராம்சமாகத் தான் இந்த செவ்வாய் தோஷம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பல மூட விஷயங்களும் இதனுடன் சேர்ந்து கொண்டு மக்களைப் பாடாய்படுத்துகிறது. இன்றைய காலக்கட்டங்களில் நாம் தினமும் செய்தி தாள்களில் பார்ப்பது காமத்தினால் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள் ஏராளம். பெரும்பாலான திருமண உறவுகள் இன்று முறிந்து போவதற்கு இந்த தாம்பத்திய உறவின் தோல்வி ஒரு முக்கிய காரணமாக இருந்திருப்பதை நாம் நன்றாக உணர்ந்தே இருக்கின்றோம். திருமண உறவிற்கு இனிமை சேர்க்கும் இந்த தாம்பத்திய உறவு தோல்வியில் முடிந்தால் நிச்சயம் அந்த திருமணமும் தோல்வியில் தான் முடியும் என்பதிற்கு யாரிடமும் மாற்று கருத்து இருக்க முடியாது. செக்ஸ்ல சம பலமிருக்கிற ஆணையும் பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் அந்த திருமணம் வெற்றி பெறும். அதனால் தான் செவ்வாய் தோஷமுள்ள ஒரு ஆணிற்கு செவ்வாய் தோஷமிருக்கிற பெண்ணை கட்டி வைக்க வேண்டுமென்கிற கருத்து சரியாகவேப்படுகிறது. அப்போது தான் அந்த ஆணிற்கு அந்த பெண் தாம்பத்தியத்தில் ஈடு கொடுக்க முடியும். என்னடா இது திருமணம்னாலே தாம்பத்தியம் மட்டும் தானா என்று நினைக்க கூடாது. திருமண வாழ்வில் தாம்பத்தியம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.  அதனால் தான் மேலே சொன்ன கருத்திற்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையாமலும் ஜாதகத்தில் செவ்வாயும் பலமிழந்து இருந்தால் அப்போது தான் அந்த ஜாதகம் தன்னுடைய துணைவருக்கு தீங்கு செய்ய ஆரம்பிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் நீச்சமடைவது, செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பது, செவ்வாய் சூரியனுடன் சேர்ந்திருப்பது, செவ்வாய் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருப்பது, சுபரின் பார்வை பெறமாலிருப்பது பகை வீட்டிலிருப்பது போன்றவைகள் தான் அந்த ஜாதகரின் துணைவருக்கு நோய்வாய்படுதல், நீண்டகால நோய் தொந்தரவு, கருத்து வேறுபாடு, திருமண உறவு கசந்து போகுதல், விவாகரத்து, வழக்கு வியாஜ்ஜியம், விபத்து, குடும்ப சண்டை, தாம்பத்திய சுகமில்லாமை, உறவினர் பகை, சகோதர சகோதரி சண்டை என தீங்கின் பட்டியல்நீண்டு கொண்டே போகிறது. மேற்சொன்ன தீய பலன்கள் எல்லாம் செறும் தோஷத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றும் கொள்ளக் கூடாது. இவையும் கிரகங்களின் இருப்பிடம், சேர்கை மற்றும் பார்வை பலங்களைப் பொருத்தே கூட்டுப் பலன்கள் அமைகிறது. செவ்வாய் தோஷத்தை விட கடுமையான தோஷங்கள் எல்லாம் உள்ளன. உதாரணத்திற்கு சுக்கிர தோஷம். இது  தான் மிகக் கடுமையான தோஷமாக எனக்கு படுகிறது. இது மிச்ச தோஷங்களையெல்லாம் விட இதனால் ஏற்படுகிற பாதிப்பு கொஞ்சம் கடுமையாகவே இருக்கும்.

எதெல்லாம் செவ்வாய் தோஷம் இல்லை?
உண்மையில் நம்ம ஜோதிட நூல்கள் எல்லாமே எதெல்லாம் செவ்வாய் தோஷம் இல்லை என்று ஒரு பட்டியலையயே போட்டு வைத்துள்ளார்கள். அநத வகையில் சில விதிவிலக்குகளைப் பார்ப்போம். ஒரு ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,7,8,12 வீடுகளில் செவ்வாய் இருந்தாலும்
செவ்வாய் அதன் உச்ச வீடான மகரத்தில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் சிம்மம், மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் சுபருடனோ (அ) சுபர் வீட்டிலோ இருந்தால் தோஷமில்லை.
செவ்வாய் குருவுடனோ (அ) சந்திரனோடோ சேர்ந்திருந்தால் அது தோஷமில்லை.
செவ்வாய் ராசியில் பலமிழந்திருந்தாலும் அம்சத்தில் பலம் பெற்றிருந்தால் கூட அது தோஷமில்லை.
செவ்வாய் சுக்கிரனோட வீட்டிலிருந்தாலும் தோஷமில்லை.

இந்த மாதிரி சுமார் 14 வகையான விதிவிலக்குகளை நம் முன்னோர்கள் கூறி விட்டு சென்றுள்ளனர். இப்படி பார்த்தால் பெரும்பாலான ஜாதகங்கள் செவ்வாய் தோஷ நிவர்த்தி அடைந்து விடுகின்றன. ஆனால் இதை பொதுவாக மக்கள் தெரிந்து கொள்வதே இல்லை. இவ்வாறு ஒரு செவ்வாய தோஷ நிவர்த்தி பெற்ற ஜாதகத்தை கண்டு அச்சம் கொள்ள தேவையேயில்லை. இதனால் தோஷ நிவர்த்தி அடைந்த ஜாதகத்தையும், தோஷமுள்ள ஜாதகத்தையும் கூட சேர்த்து திருமணம் செய்து வைக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. ஆனால் எந்த வகையிலும் தோஷ நிவர்த்தி அடையாத ஜாதகத்தையும் தோஷமுள்ள ஜாதகத்தையும் சேர்க்கும் போது நிச்சயம் எதிர்மறையான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

பரிகாரங்கள்
உலகில் உள்ள எல்லா வழிகளுக்கும் ஒரு மாற்று வழிகள் உண்டு. அதுபோலத் தான் இந்த தோஷங்களுக்கான மாற்று வழிகள் தான் இந்த பரிகாரகங்கள். மனிதர்கள் தவறு செய்வதென்பது அவர்களின் கருமத்தின் பலனாக நடப்பது. எனவே தெய்வங்களை வழிப்பட இந்த பாவக் கர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபட முடியும். செவ்வாயின் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பிரதான ஸ்தலம் அனைவரும் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில். ஒரு செவ்வாய்க் கிழமை இங்குள்ள தீர்த்தத்தில் முழ்கி அங்கு எழுந்தருளியிருக்கும் வைத்தியநாத ஸ்வாமியையும் தையல் நாயகியையும் முறையாக நாம அர்ச்சனை செய்து மனமுருகி வழிப்பட்டு, மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, பின்னர் அங்கு எழுந்தருளியிருக்கும் செவ்வாய் பகவானையும், முருகரையும் முறையாக தீபமேற்றி மனமுருகி வழிப்பட்டு அங்கேயே முடிந்த அளவு அன்னதானம் வழங்க அனைத்துவிதமான செவ்வாய் தோஷங்களின் தீய பலன்களின் தாக்கங்களும் குறைந்து அல்லது விலகி ஓடுவதை நாம் நன்றாக உணர முடியும். இந்த ஸ்தலம் மேலும் பல தீராத வியாதிகளையும் போக்கும் ஸ்தலமாக பல ஆயிரமாண்டுகளாக மக்களை காத்துவருகின்றது.

கருத்து.
முடிவாக சொல்லவதென்றால் செவ்வாய் தோஷமென்பது ஆராயப்பட்டு கருத்தில் கொள்ள வேண்டுமென்பதே தவிர அச்சப்பட வேண்டிய ஒன்று அல்ல.

2 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது…

வாங்க..

கச்சேரியை நல்லாவே ஆரம்பிச்சிருக்கிங்க. இது சுட்ட பதிவா சுடாத பதிவா? தெரியலை. வெறும் தியரி மட்டும் வேண்டாம்.உங்க அனுபவத்தையும் சேர்த்து எழுதுங்க.

வாழ்த்துக்கள்.

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

நன்றி சித்தூர் முருகேசன் அவர்களே!
நிச்சயமாக இனி வரும் பதிவுகளில் என்னுடைய அனுபவங்களையும் சேர்த்து எழுதுகிறேன்.

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.