கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 31 மார்ச், 2011

நான் கண்ட ஜோதிடர்கள்!!!




ஜோதிடத்தினை வாழ்க்கையில் எங்ஙனம் உபயோகிக்க வேண்டுமென்பதை அறிந்து கொள்வதற்காக தான் இந்த ­அனுபவப் பதிவு. பதிவின் நீளம் கருதி இதனை ஒரே பதிவா பதிய எனக்கு விருப்பமில்லை. இதனை தொடந்து இந்த தலைப்பிலேயே அவ்வப்போது எழுத விரும்புகிறேன்.
வாசகர்கள் கொஞ்சம் பொறுமையும் தொடர்ந்து படிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2002ம் வருடம். அப்ப எனக்கு 22வயது. நான் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலம் அது. சரியான வேலையில்லை. சம்பளம் ரொம்ப கம்மி. என்னுடைய சம்பளம் என் ஒருவனுடைய சாப்பாட்டிற்கும், நான் தங்கியிருந்த இடத்திற்கு கொடுக்கிற வாடகைக்குமே சரியா இருக்கும். வேலையில் ஏற்பட்ட அடி என்னை மேலும் ரொம்ப பலவீனப் படுத்தியிருந்தது.

அப்ப எனக்குள்ள நாத்திக உணர்வு தலைதூக்கியிருந்த காலம். கடவுளெல்லாம் கும்பிடமாட்டேன். கோவிலுக்கு போனா கூட எல்லாரையும் உள்ள அனுப்பிவிட்டு நான் வெளியேவே உட்கார்ந்துக்குவேன். அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லாம இருந்த என்னுடைய வாழ்க்கையில் என்னை மீறி அடுத்தடுத்த நடந்த சம்பவங்கள் என்னை ரொம்பவே நிலைக்குலைய செய்திருந்தது.

என் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்ற அச்ச உணர்வு வந்து என்னை பிடுங்கி தின்ன ஆரம்பித்தது. எந்த நல்ல விஷயமும் நடக்க மாட்டேங்துன்னு ஏங்கினேன். யாராவது எனக்கு நல்லது நடக்குமுன்னு சொல்லமாட்டாங்களான்னு ஏங்கி தவிச்சேன்.

சரி சரி என்னுடைய கஷ்டங்களை சொல்லி யாரையும் நான் சங்கடப் படுத்த விரும்பவில்லை.

என்னுடைய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிக்கிற ஆவலோட நான் தேடிச் சென்ற இடம் ஒரு ஜோதிடரின் வீடு தான். என்னுடைய ஜாதகத்தை அம்மாவிடமிருந்த வாங்கிக் கொண்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த ஜோதிடரிடம் என்னை அழைத்துப் போகச் சொன்னேன். அது ஒரு ஓட்டு வீடு தான். அந்த வீட்டினுள் நுழைந்தவுடன் ரொம்ப பழமையான பொருட்கள் தான் என் கண்ணில் பட்டன. ஒரு கோரைப் பாயை விரித்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்துக் கொண்டு அந்த ஜோதிடர் எங்களை வரவேற்று அமர சொன்னார். அவரு ரொம்ப பிரபலமான ஜோதிடரெல்லாம் கிடையாது. ஆனா அந்த பகுதிக்கே அவர் ஒருத்தர் தான் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்.

அவரிடம் நான் "எனக்கு யார் கீழேயும் வேலைக்கு செய்யப் பிடிக்கல. நான் ஏதாவது தொழில் பண்ணி பிழைச்சிக்க முடியுமா? அப்படி தொழில் பண்ணினா எந்த தொழில் செய்யறது?" என்று கேட்டேன்.

அவரு என்னுடைய ஜாதகத்தை பார்த்துவிட்டு நீ இப்ப தொழில் பண்ணலாம். பத்துல சூரியன் இருக்கு சமையல் சம்பந்தப்பட்ட உற்பத்தி மற்றும் தின்னு அழிக்கிற... அதாவது ஹோட்டல் தொழில் பண்ணுப்பா.... நீ டாப்பா.....வருவேன்னு சொன்னாரு.  சரிங்க அய்யான்னு சொல்லிட்டு எழுந்து வந்திட்டேன். ஆனா வழக்கம் போல எல்லா அம்மாக்களும் தன் புள்ளைங்க ஜாதகத்தை காட்டி கேட்கிற அந்த கேள்வியை "என் பையன் கல்யாணம் எப்ப நடக்கும்" என்கிற கேள்வியை என் அம்மாவும் கேட்க அவரும் ஏதோ ஒரு பதிலைச் சொல்லி அனுப்பி வைச்சாரு.

அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு அவரு சொன்ன பதில்ல கொஞ்சம் கூட திருப்தியில்லை. நான் என் அம்மாவிடம் கேட்டேன். "இவரைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை வரல. இந்த ஆளுக்கு எவ்வளவு ரூபாய் தட்சணையா கொடுத்தே?" போயும் போயும் ஒரு ஒன்றையணா ஜோசியர்கிட்டே போய் என்னை அழைச்சிக்கிட்டு வந்திருக்கியேயம்மா என்றேன்.

சரி அடுத்து யார் பெரிய ஜோசியர் இருக்கா? சொல்லு... அவரு வீட்டிற்கு போகலாமென்றேன் நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.