கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

திங்கள், 27 ஜூன், 2011

ஊழலுக்கு தண்டனை யார் தரப் போகிறார்கள்?


இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் தான். ஊழல் செய்துவிட்டு வெட்கமில்லாமல் எதற்கும் அச்சப்படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை பார்க்கும் நேர்மையாளர்களுக்கு ரத்தம் கொதிக்க தான் செய்கிறது.
ஆனால், எல்லாருக்கும் ஒரே ஒரு சந்தேகம் தான் தோன்றுகிறது. "இவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப் படுவதில்லையே?, தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்களே?" என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்கிறது.
இவர்களுக்கு யார் தான் சரியான தண்டனை வாங்கித் தரப் போகிறார்களோ? என்று அங்கே அங்கே கூக்குரல் எழுவதை கேட்பதுண்டு. உண்மையிலேயே இவர்களுக்கு யார் தண்டனை தர வேண்டும்? அந்த ஆண்டவன் தான் தண்டனை தர வேண்டும் என்று எல்லோரும் சொல்வதுண்டு. 
ஆம், உண்மை தான் அந்த ஆண்டவன் தான் தண்டனை தர வேண்டும். ஆனால் ஆண்டவன் இந்தப் பணியை நேராகத் தானே செய்வதில்லை. அதற்கு தகுந்த ஒரு கிரகத்தினை அப்பாயிண்ட் செய்திருக்கிறார். ஆம், அவர்தான் இந்த சனீஸ்வர பகவான். 


துலா ராசியில் உச்சம் பெறும் சனி பகவான், துலாப் பாரத்தினை கையில் கொண்டிருக்கும் நீதித் தேவதைப் போல பாரபட்சமின்றி, பாவத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்காமல் விட மாட்டார். இறைவனே! ஆனாலும் அவர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை உடையவர். அதனால் தான் "ஈஸ்வர" பட்டம் பெற்ற சனி பகவானை கண்டு அனைவரும் அஞ்சுவார்கள்.

இந்த ஆண்டு இறுதியில் சனிப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. சனி பகவான் கன்னியிலிருந்து, துலாத்திற்கு மாறப் போகிறார். அதாவது தனது உச்ச வீட்டில் சஞ்சரிக்க போகிறார். இந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய தண்டனைகளை எல்லாம் கொடுத்து நியாத்தினை உலகத்தில் நிலை நாட்டப் போகிறார். ஆம், சனி பகவான் தவறு செய்தவர்களுக்கெல்லாம், எல்லாரும் வியக்கும் படியான தண்டனையை அளித்து உலகத்திற்கு ஆச்சரிய மூட்ட வருகிறார்.

இது உலகம் முழுக்க அரங்கேறப் போகிறது. இந்தியா மட்டும் என்ன விதி விலக்கா என்ன? ஆம், இந்தியாவில் ஊழல்களை சாதாரணமாக செய்துவிட்டு, பண பலத்தால் அனைவரையும் மிரட்டி கொண்டு, தனி ராஜாங்கம் நடத்தி வந்த அத்தனை ஊழல்வாதிகளும், சட்டத்திற்கும், நீதிக்கும் பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது. அடுத்த வரப் போகிற இரண்டரை ஆண்டுகளில் பெருமபாலான ஊழல் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க போவதை மக்களாகிய நாம் கண்கூடாக பார்க்கப் போகிறோம்.

நம்ம சனி பகவான் சிம்மத்திலிருந்த காலத்திலிருந்தே ஊழலுக்கு எதிரான நீதியை நிலைநாட்டும் பணியை தொடங்கிவிட்டார். எப்படி என்கிறீர்களா? ஆம் சிம்மத்திலிருந்த போதே தனது மூன்றாம் பார்வையால் துலா ராசியை பார்த்தார். அந்த கால கட்டங்களிலிருந்தே ஊழல் சம்பந்தமான அனைத்தையும் வெளிக் கொணரும் பணியினை செவ்வனே செய்துக் கொண்டுத் தானிருக்கிறார். இதோ இந்த ஆண்டு இறுதியில் துலா ராசிக்கு சனி பகவான் மாறப் போகிறார். ஆணவக்காரர்களாக இருந்த பலரும் வீழப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

மக்களோடு மக்களாக நானும் அந்த வியக்கத் தக்க தண்டனைகளை காண மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். அடுத்து வரப் போகிற தலைமுறைக்கு இந்த தண்டனைகள்  எல்லாம் ஒரு பாடமாக என்றும் நினைவில் இருக்கப் போகிறது. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். ஆம் நம் சனி பகவான், மெதுவாக நகருபவர். எனவே தான் தண்டனைகள் மெதுவாக கிடைக்கின்றன. அவருக்கு உரிய நேரம் வரும்போது, பாவத்திற்கு தக்க தண்டனையை வழங்கி நேர்மையை நிலை நாட்டுவார். 

பணத்தால் நிச்சயமாக நம் சனி பகவானை யாரும் விலைக்கு வாங்க முடியாது. ஊழலால் உண்டான செல்வம் பல்கிப் பெருகுவது போல் பெருகி பின் குன்றிவிடும் என்பது அய்யனின் வாக்கு.

பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

வெள்ளி, 17 ஜூன், 2011

யார் வெளிநாட்டிலேயே செட்டில் ஆவார்கள்?

இந்தப் பதிவில் நாம் இன்று இரண்டு யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம். முதலாவது வெளிநாட்டு யோகம் பற்றியும், இரண்டாவது தர்மகர்மாதி யோகம் பற்றியும் பார்ப்போம்.


1. வெளிநாட்டு யோகம்





இன்றைய காலக் கட்டங்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிற்கு சென்று வருவதும், ஒரு சிலர்கள் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. பெரும்பாலும் 12மிடம் தான் வெளிநாட்டுப் பயணங்களை தீர்மானிக்கிறது என்றாலும் ஒன்பதாம் இடம் தான் வெளிநாட்டிலேயே செட்டிலாகும் யோகத்தைப் பற்றி தெளிவாக கூறுகின்றது. நமக்கு தெரிந்த வரையில் மக்கள் 5லிருந்து 10, 15 ஆண்டுகள் வரை தங்கிவிட்டு மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பி வந்து விடுகின்றனர். இவர்களுக்கு இந்த யோகம் பொருந்தாது. அவர்களுடைய ஜாதகத்தில் அதற்கு வேறுவகையான யோகங்கள் அமைந்திருக்கும். வெகு சிலருக்கு தான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகும் யோகம் உண்டு. அதனை இந்த ஜோதிடப் பாடல் தெளிவாக்குகிறது.


ஜோதிடப் பாடல்

கண்ட பாக்கியா திபனும்
         கருது வெள்ளி யிருவோரும்
மிண்டு சன்மத் திருந்திடினும்
         வேந்தன் பாக்கி யாதிபத்தில்
அண்டி உறினும் பிறதேசத்து
         அரசனாய் தனவான் ஆகியுமே
பெண்ட தொன்றை மணம்புரிந்து
          பிரதா பங்கள் பெருங்குணவான்


ஒன்பதாம் அதிபதியும், சுக்கிரனும் கூடி லக்கினத்தில் இருந்தாலும், குருவும் ஒன்பதாம் அதிபதியும் கூடி பத்தில் இருந்தாலும், பிறருடைய நாட்டில் ராஜ மரியாதையுடன், மிகுந்த செல்வத்துடன், பெண்ணொருத்தியை மணம்புரிந்து வாழ்வான்.


2. தர்மகர்மாதி யோகம்

யோகத்திலே இந்த தர்மகர்மாதி யோகத்தினை மிக உயர்வாக நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதாவது தான் செய்யுகின்ற தர்மத்திற்கும், கர்மத்திற்கும் தானே அதிபனாக இருப்பது தான் இந்த தர்மகர்மாதி யோகம்.
தான் ஈட்டுகின்ற பொருளை யாருடைய அடிபணிதலுக்கும், நிர்பந்தத்திற்கும் ஆளாகாமலும் தர்ம கரியங்களுக்கு உபயோகப் படுத்துவனை உலகம் எங்ஙனம் போற்றும் என்பதனை நாம் அறிவோம் அல்லவா?
அதனால் தான் இந்த யோகம் மிக உயர்ந்த இடத்தினை பெறுகின்றது. இதனை பின்வரும் ஜாதக அலங்காரப் பாடலில் இருந்து அறியலாம்.



ஜோதிடப் பாடல்

குணமார் தன்ம கன்மாதி
          கூறுஞ் சுபக்கோ ளுடன்கூடி
மணமார் தன்ம கன்மத்தின்
          மருவி இருக்கின் மன்னவனாம்
உணர்வாய் இவர்கள் இருவருடன்
          ஓரைந் தாதி யுடன்கூடிப்
புணர்வர் எஙகே இருந்தாலும்
           பூமி புரக்கும் புரவலனாம்


9-10ஆம் அதிபதிகள் தர்மகர்மாதிபதிகளாவர். இவர்கள் இருவரும் கூடி நற்கோளுடன் சேர்ந்து பத்திலே அமர்ந்து இருந்தால் அவன் நாடாளும் அரசனாவான். இவர்களுடன் ஐந்தாம் அதிபதியும் கூடி ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவன் பூமியறிந்த மன்னனாவான்.


பெரும்பாலும் ரிஷப லக்ன மற்றும ராசிக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதியாக சனிபகவானே வருவதால் இவர்கள் பெரும்பாலும் தான் ஈட்டும் பொருளை தானே செலவு செய்யும் அதிகாரம் இயல்பிலேயே பெற்றவர்கள். அதற்காக இவர்களுக்கு தர்மகர்மாதி யோகம் உண்டு என்று பொருள் அல்ல. யோகம் என்பது மேற்சொன்ன அமைப்பினை பெற்றிருந்தால் மட்டுமே ஆகும். ஒன்பது பத்தாம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைவது கூட ஒருவகையான தர்மகர்மாதி யோகம் தான். ஆனால் அதன் பலன் மேற் சொன்ன பலனிலிருந்து வேறுபட்டே இருக்கும். ஏனெனில் மேற் சொன்ன இரண்டு யோகங்களுமே அரிய வகை யோகங்களே ஆகும்.

பூக்கள் மலரும்......