கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

அஷ்டமத்து சனி

         நம்ம எல்லாரும் ஏழரை சனி ஏழரை சனின்னு அடிக்கடி சொல்லுவோம். யாருக்காவது கெட்டது நடந்துச்சிருச்சின்னா உடனே அவனுக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிடுச்சின்னு சொல்லுவோம். அதெல்லாம் அடிக்கடி நாம
கேட்கறதுதான். பொதுவாக ஏழரை சனி படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோச்சாரத்தில் 12, 1, மற்றும் 2 இடங்களுக்கு வருவது தான் ஏழரை சனி என்று அர்த்தம். அதாவது 12ஆம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள், ஜென்ம ராசியில் இரண்டு அரை ஆண்டுகள் மற்றும் 2ம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள் என்று மொத்தம் 7 1/2 ஆண்டுகள் என்று மெதுவாக நகர்ந்து சனி பகவான் நமக்கு பலன்களை தருகின்றார்.
அவர் மிக மெதுவாக நகர்வதால் நமது வாழ்வில் அவர் தரும் பலன்கள் நாம் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நின்று விடுகிறது. இந்த ஆண்டுகளில் அவரவர் அனுபவிக்கும் பலன்கள் மனிதன் சாகும் வரையில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும். பலன்கள் என்பது மாறுபடலாம் அவரவர் பூர்வ புண்ணிய பாவங்களைப் பொறுத்து அவரவர் இந்த காலக் கட்டங்களில் நற்பலன்ளையோ அல்லது கெடு பலன்களையோ அனுபவிப்பார்கள் என்பது நிதர்சனம். பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த ஏழரை சனி காலத்தில் கெடு பலன்களே நடக்கின்றன. மாறாக சிலருக்கு அவர்கள் ஆச்சரிய படுகின்ற அளவுக்கு நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் இளமை காலங்களில் வரும் எழரை சனியில் தான் நிறைய பேருக்கு திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. நல்ல சந்தோஷமான வாழ்க்கை என்று அனுபவிப்பார்கள். இது எப்படி சாத்தியம் அவர்களுக்கு மட்டும் ஏன் கெடு பலன்கள் நடக்க வில்லை என்று அவர்களை பார்க்கும் மற்றவர்கள் ஆச்சரியபடுவதும் உண்டு. ஆம் அவர்களுக்கு முதல் சுற்று (அ) இரண்டாவது சுற்று (அ) மூன்றாவது சுற்று இதிலே எந்த சுற்று நடக்கிறது என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். முதல் சுற்றாக இருந்தால் பெரும்பாலும் கெடு பலன்கள் தான் நடக்கும். இதற்கு மங்கு சனி என்று பெயர். இரண்டாவது சுற்றிற்கு பொங்கு சனி என்று பெயர். இது பெரும்பாலும் வாழ்க்கையில் நல்ல பலன்களை தான் தரும். மரண சனி இது கடைசியாக ஆண்டு அனுபவித்த பிறகு வருவது. பெரும்பாலும் ஞானம் மற்றும் மோட்சம் சம்பந்தபட்ட பலன்களை வழங்குவார் சனி பகவான். இவையனைத்தும் பொதுவான ஏழரை சனி பலன்கள். ஆனால் உண்மையில் அவரவர் பிறந்த ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும். ஏனெனில் அந்த ஜாதகருக்கு சனி பகவான் எந்த இடத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறார் மற்றும் ஜென்ம லக்னம் மற்றும் ராசிக்கு சனி பகவான் சுபரா அல்லது பாவியா என்பதை பொறுத்து தான் பலன்கள் மாறுபடும். சரி ஏழரை சனியிலுல தான் எனக்கு கல்யாணம் ஆச்சி அதுல தான் நான் வீடு வாங்கினேன் அதுல தான் நான் நிறைய சம்பாதிச்சேன் என்று சொல்றவங்களையும் நான் நிறைய பார்த்து இருக்கிறேன். உண்மையில் அது மேற்சொன்ன ஜென்ம ஜாதகத்தை பொறுத்தும் அந்த காலங்களில் நடக்கும் திசா புக்தியை பொறுத்தும் தான் நடக்கின்றது. தற்போது சனி பகவான் உச்ச வீட்டில் இருக்கின்றார். நான் ஏற்கனவே ஊழலுக்கு தண்டனை யார் கொடுப்பார்கள் என்ற பதிவில் எழுதியிருந்தேன். அதுபோல தற்போது லாலு பிரசாத் யாதவிற்கு 15 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது. மேலும் ஒரு எம்.பி. தண்டிக்கப்பட்டிருக்கிறார். இவை எல்லாம் இந்திய அரசியல் சரித்திரத்தில் புதிய பதிவுகள் தான். பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ஒரு ஆண்டிற்குள் எத்தனை பேர்கள் தண்டிக்கப்பட போகிறார்கள் என்று?



            சரி தலைப்பிற்கு வருவோம். அது என்ன அஷ்டமத்து சனி?
சனி பகவான் கோச்சாரத்தில் ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருவது தான் அஷ்டமத்து சனி. இந்த கால கட்டத்தில் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. ஏழரை சனியில் கஷ்டங்களை அனுபவிக்காதவர்கள் கூட இந்த காலத்தில் கடுமையான கெடு பலன்களை அனுபவிப்பார்கள். அதற்கு காரணம் சனி பகவான் எட்டாமிடத்திற்கு வரும் போது சனி பகவானின் பார்வை 10, 2 மற்றும் 5 ம் வீடுகளின் மீது பதிகின்றன. அதன்படி அஷ்டமத்து சனி காலத்தில் சனி பகவானின் 3ம் பார்வையாக முதலில் 10ம் இடமான தொழில் உத்தியோக ஸ்தானத்தில் விழுவதால், முதலில் ஜாதகரின் வேலையையோ அல்லது தொழிலையோ காலி பண்ணி விடும். ஏதாவது ஒரு வகையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும். முதலில் வேலையை காலி பண்ணி விட்டாலே ஒரு மனிதன் நடைபிணமாக மாறிவிடுவான். உத்யோகம் புருஷ லட்சணம் அல்லவா! அது வரையில் நன்றாக தொழிலிலோ அல்லது உத்தியோகத்திலோ கொடி கட்டி பறந்த அவன் சற்றும் எதிர்பாராத அற்ப காரணங்களுக்காக அவனது கர்மத்தினை அவன் விட்டுவிட்டு ஒன்றும் செய்யாமல் சுத்தி வருவான். அல்லது ஒரு கர்மமும் அமையாமல் வெறும் அலைச்சலையே சந்திப்பான். அடுத்து கர்மம் இல்லாவிட்டால் காசு இல்லை. அவனக்கு சம்பாத்தியம் என்பதே இல்லாமல் போய்விடும்.
ஆம் அது தான் சனி பகவானின் 7ம் பார்வையாக ஜென்ம ராசிக்கு 2ம் இடத்தில் விழும். அது வாக்கு, குடும்பம், தனம் ஸ்தானத்தில் விழுவதால் ஜாதகரின் தனத்திற்கு வேட்டு வைத்து விடும். அடுத்து வாக்கிற்கும், குடும்பத்திற்கும் வேட்டு வைத்து விடும். அதாவது உத்தியோகம் போய்விடும். பாடுபட்டு ஈட்டிய செல்வம் எல்லாம் போய்விடும். அதுவரையில் இனிமையா இருந்த மனைவியோடு சண்டையிட்டு கொண்டு குடும்பத்திற்கே வேட்டு வைத்து விடும். வழக்கு கோர்ட் கேஸ் என்று அலைய விடும். சந்திப்பர்வகள் எல்லாரும் ஏமாற்றுகாரர்களாக இருப்பார்கள். பணத்தினை வாங்கி விட்டு வாங்கிய கடனை திருப்பி தரமாட்டார்கள். போதாத குறைக்கு நீங்களும் கை நீட்டி கடன் வாங்க வேண்டும். நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்து விட வைக்கும். பணத்திற்காக எந்த முதலீடு செய்தாலும் அது கடுமையான தான் நஷ்டத்தில் முடியும். எழுந்து விடலாம் என்று எழுந்திருப்பீர்கள் ஆனால் ஏறியது ஒரு படி என்றால் இறங்கியது எட்டு படியாக தான் இருக்கும். அந்த அளவிற்கு இரண்டாம் வீட்டின் பதியும் பார்வை கொடிய பலன்களை வழங்கும். சரி அடுத்து ஒரு பார்வை இருக்கிறது சனி பகவானிற்கு. ஆம் 10ம் பார்வையாக 5ம் இடத்தினை பார்க்கிறார். அது பூர்வ புண்ணிய ஸ்தானம். அதாவது போன ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தற்போது தண்டனை வழங்கும் நேரம் இது.
மீளவே முடியாத அளவிற்கு கடுமையான தண்டனைகள் எல்லாம் வழங்கபடும். சிறைவாசம் முதல் மனச்சிறை வரை என்ற வகை வகையாக தண்டனைகளை செய்த பாவத்திற்கேற்றாற்போல் வழங்குவார். ஆக உண்மையான தண்டனை காலம் என்பதே இந்த அஷ்டமத்து சனி காலம் தான்.
இதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம். வாழ்க்கையில் இந்த காலத்தினை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி. இதிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காரியம் என்றாலும் அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை பதிந்தால் மட்டும் தான் ஓரளவிற்கு அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் எனலாம் இருந்தாலும் முழுமையாக விலகாது என்பதே நிதர்சனம். அந்த அளவிற்கு அஷ்டமத்து சனி படுத்தும் என்றால் அது மிகையில்லை. முதல்ல கஷ்டத்தை அனுபவிக்கும் போது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், அப்புறம்?  அப்புறம் என்ன அப்புறம்? அதுவே பழகிடும். என்னங்க கும்கி பட வசனம் மாறி இருக்கேன்னு யோசிக்கீறிங்களா? அட ஆமாம்ங்க அஷ்டமத்து சனியும் நீங்க உங்க கஷ்டத்தை ஏத்துக்கிற வரைக்கும் விடாதுங்க.

         இதற்கு பரிகாரம் என்பதே முடிந்த வரை வந்த கஷ்டத்தை அனுபவிப்பது தான். முடிந்த வரை சனி பகவானை பழிக்காமல் சனிக்கிழமை பிடித்த தெய்வங்களையும், சனி பகவானையும் வணங்கி வாருங்கள். முடிந்தால் திருநாள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் முழ்கி தர்ப்பாரண்யேஸ்வரரையும் பிராணாம்பிகையும் வணங்கி விமோசனம் பெறலாம்.

          நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதப்பட்ட பதிவு இது. காரணம் இதே அஷ்டமத்து சனி தான் எனக்கும். மீதம் எதையும் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.
       
          ஜோதிடப் பூக்கள் மீண்டும் மலர காரணமான எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

சகட யோகம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 - மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். சரி, இந்த “சகட யோகம்” என்பது என்ன செய்யும்?
இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாக போராடும் குணமுடையவர்கள்.


ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாக கீழே வந்தே ஆக வேண்டும், அதே போல கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா? 


அது போல தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.


வெற்றி தோல்விகளை பார்த்து பழகியவர்கள் என்பதால், எதையும் தாங்கும் வலிமை படைத்தவர்கள். அதே நேரத்தில் விரக்தியின் உச்சத்திற்கு செல்ல கூடியவர்கள்.


யோகத்தில் இது தீய யோகமாகவே சொல்லப்படுகிறது.
இந்த சகட யோகத்தோடு, வேறு நல்ல யோகங்களும் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் மட்டுமே சகட யோகத்தின் கெடு பலன் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இல்லையேல் கெடு பலன்களே அதிகம் நடக்கும். 


இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு இந்த யோகம் இருக்கும் எனலாம்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை - 2


வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை -2 (தொடர்ச்சி.....)

“அது மாதிரி சாப்பிடற சாப்பாட்டுலயே பாதி விஷயம் அடங்கியிருக்கு” என்று சொல்லி விட்டு ஒரு குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் ஒரு ராஜா கடுமையான வயிற்று வலியினால் துடித்து வந்தான். அவனுக்கு அரண்மனை வைத்தியர்கள் பலரும் பலவிதமான மருந்துங்கள் கொடுத்தும், அவருக்கு வயிற்று வலி மட்டும் நின்ற பாடில்லை. இறுதியில் அந்த ராஜா, “என்னுடைய வயிற்று வலியை போக்குபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்” என்று அறிவித்தார். அப்போதும் பலர் முயன்றும் பலன் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வயிற்று வலியின் கடுமை அதிகமாகி அவரால் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாமல் போனது. “நாட்டிற்கே ராஜா ஆகியும் கூட என்னால் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியவில்லையே” என்று மிகவும் வருத்தபடலனார் அந்த ராஜா. இந்த நிலையில் ஒரு முனிவரை சந்தித்தார் ராஜா. ராஜா தன் கஷ்டங்களை அவரிடம் சொன்னார். தனக்கு ஏதேனும் உபாயம் கூறும் படி மன்றாடினார். “சரி, நான் உன்னுடைய நோயை குணப்படுத்துகிறேன்” என்று கூறினார் முனிவர். “நான் சொல்லும் படி மட்டும் நீங்கள் செய்து கொண்டு வாருங்கள் நீங்கள் நிச்சயம் குணமடைவீர்கள்” என்று சொன்னார் முனிவர். “நீங்கள் தினமும் சாப்பிடுவதற்கு முன்னர் நீங்கள் உண்ணும் உணவின் ஒரு பகுதியை காக்கைக்கு இட வேண்டும். அந்த காகம் உண்டபிறகே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். காகம் சாப்பிடமால் நீங்கள் சாப்பிட கூடாது. இவ்வாறு தொடர்ந்து 6 மாதங்கள் செய்து வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்த நோய் குணமாகிவிடும், இதற்கு வேறு எந்த மருந்தும் வேண்டாம்.” என்று சொல்லி அனுப்பினார் அந்த முனிவர்.
அதன்படியே அந்த ராஜாவும் முதலில் காகத்திற்கு உணவினை வைத்துவிட்டு, காகம் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். காகம் வந்து அமர்ந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமல் திரும்பி சென்று விட்டது. காகம் சாப்பிடாததால் அந்த உணவினை கொட்டிவிட்டு ராஜா சென்று விட்டார். இப்படியே ஏழு நாட்களானது, அதே நிகழ்வு திரும்ப திரும்ப நடந்தது. ஆனால் காகம் சாப்பிட வில்லை. ராஜா வழக்கம் போல காகத்திற்கு உணவிட்டு திரும்பினார். அன்று ராஜா தன்னை அறியாமல் திருப்தியாக உணவருந்தினார். வெளியே வந்து பார்த்தார், திடீரென்று அந்த காகம் வந்து, அந்த ராஜா இட்ட உணவினை உண்ண ஆரம்பித்தது. ராஜாவிற்கு மிகுந்த சந்தோஷம். தற்போது ராஜா தினமும் மகிழ்ச்சியோடு காகத்திற்கு உணவிட்டு, பின்னர் தானும் நல்லபடியாக உணவருந்தினார்.
இப்படியே 6 மாதங்கள் கடந்து விட்டன. ராஜாவும் நல்ல உடல்நிலைக்கு வந்துவிட்டார். இப்போது வயிற்று வலியெல்லாம் இல்லை. அவர் ஆச்சரியத்துடன் தனக்கு உபாயம் சொன்ன அந்த முனிவரை நினைவு கூர்ந்தார். உடனே அந்த முனிவரை பார்க்க சென்றார், அந்த முனிவரிடம் சென்று ராஜா நடந்ததை சொன்னார். “தற்போது தனக்கு வயிற்று வலியெல்லாம் இல்லையென்றும், தற்போது தன்னால் நன்றாக சாப்பிட முடிகிறதென்றும்” சொன்னார். ராஜா, “முனிவரிடம் தனக்கு உடல்நிலை எந்த மருந்தும் சாப்பிடாமல் எப்படி சரியனாது” என்று தாங்கள் எனக்கு விளக்க வேண்டுமென்றார். அதற்கு அந்த முனிவர், “ராஜாவே தாங்கள் தினமும் காகத்திற்கு உணவிட்டு காத்துக் கொண்டிருக்கும் போது, அந்த காகம் வந்து பார்க்கும் போது, நீங்கள் உணவருந்தாமல் காக்கைக்கு உணவளிப்பதை கண்ட காகம் நீங்கள் முதலில் உணவருந்த வேண்டும்” என்று ஆசைப்பட்டது. அது தொடர்ந்து அவ்வாறே தனது ஆசையை வெளியிட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த காகத்தின் எண்ண அலைகள் உங்களை தாக்கி உங்களை உணவருந்த வைத்தது. தாங்கள் உணவருந்திய பின்னர் அந்த காகம் தாங்கள் இட்ட உணவினை உண்டு மகிழ்ந்தது. காகத்தின் நல்ல எண்ணமே நீங்கள் குணமாக காரணம்” என்று கூறினார்.  ராஜா அதை கேட்டு மிகுந்த சந்தோஷடத்துடன் முனிவரிடம் ஆசிப் பெற்று திரும்ப சென்றார்” என்று கூறி கதையை முடித்தார்.
“இவ்வாறு மனிதனை எண்ண அலைகள் எவ்வாறெல்லாம் தாக்குகின்றன” என்பதை எளிய கதையின் மூலம் தெளிவாக விளக்கினார் பெரியவர்.
திடீரென்று ஒரு ஜோதிடப் பாடல் ஒன்றையும் பாடிக் காட்டி அதற்கு விளக்கம்கூறியும் அசத்தினார் அந்த பெரியவர்.
அவரிடம் தொடர்ந்து நான் பேசிக்கொண்டே இருந்த போது, அவருடைய பலத்தரப்பட்ட பட்டறிவு விஷயங்கள் என்னை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் மேலும் மிகுந்த அடக்கதுடன், நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என்று கூறியது எனக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
பிறகு இருவருமே உறங்க ஆரம்பித்தோம். பிறகு நெய்வேலியில் பேருந்து ஒரு முறை நின்றது. பிறகு மாயவரத்தில் ஒரு முறை நின்றது. பிறகு அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் கும்பகோணத்திற்கு முன்பே உள்ள ஒரு ஊர் என்பதால், மாயவரத்திற்கு பிறகு உறங்காமல் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருந்தேன். ஆனால் என்னை அறியாமல் நான் நன்றாக உறங்கி விட்டதால், திடீரென்று முழிப்பு வந்து எழுந்து பார்த்தால், நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டிருந்தது. உடனடியாக நான் என்னுடைய குச்சிப் பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அவருக்கு பிரியா விடை சொல்லி விட்டு நடத்துனரிடம் சென்று சொல்லி பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். இறங்கிய மறு நிமிடமே, என்னுடைய பேண்ட் பையிலிருந்த மொபைலை பேருந்திலேயே விட்டு விட்டேன் என்று உணர்ந்தேன். மறு கணமே பேருந்தை தட்டினேன். ஆனால் பேருந்து நிற்காமல் விருட்டென்று பறந்து சென்று விட்டது. அந்த ஊரில், அந்த அதிகாலை 4 மணிக்கு என்னுடன் இறங்கிய ஒரே நபர். உடனே அந்த நபர் என்னிடம் விசாரிக்க நான் என்னுடைய மொபைலை வண்டியிலேயே விட்ட விஷயத்தை சொன்னவுடன், அவரும் அவருடைய மொபைலைக் கொடுத்து என்னுடைய மொபைலுக்கு கால் பண்ண சொன்னார். கால் பண்ணி பார்த்தேன். யாரும் எடுக்கவில்லை. உடனடியாக அடுத்த வண்டியை பிடித்து கும்பகோணம் போய் பார்த்து விடலாம் என்று ஒரு இரண்டு நிமிடம் காத்திருந்து பார்த்தேன். ஆனால் அடுத்து எந்த பேருந்தும், ஆட்டோவும் வரவில்லை. என்னுடைய வீடு அருகிலேயே இருந்ததால், உடனடியாக வீட்டிற்கு சென்று என்னுடைய மனைவியிடம் விஷயத்தை கூறி விட்டு, பைகளை போட்டு விட்டு, இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்றேன். அதற்குள் அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டிருந்தது. அங்கு சென்று பேருந்து நிலைய ஊழியர்களிடம் உதவிகள் கேட்டேன். “ஆனால் எல்லோரும் ஒட்டு மொத்தமாக நிச்சயமா யாராவது எடுத்துட்டு இருப்பாங்க”. “என்ன சார் இப்படி இருக்கீங்க!”. “இப்ப எல்லாம் மொபைலை எடுத்தவுடனே சுவிட்ச் ஆப் பண்ணி சிம் கார்டை கழற்றி போட்டுறானுங்க”. “நிச்சயமா கிடைக்காது சார்” என்றனர் கோரசாக.
அப்போது நான் சொன்னேன். “சார் என்னுடைய மொபைலை பத்திரமாக என்னுடன் பயணித்த பக்கத்து சீட்டுக்காரர் நிச்சயமாக எடுத்து வைத்திருப்பார். நீங்கள் தயவுசெய்து தகவல் மட்டும் கொடுங்க என்றேன் நம்பிக்கையாக”. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
என்ன செய்யறதுன்னு எனக்கும் ஒன்னும் புரியல. “தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து தகவல் கொடுத்து எடுத்து வைக்க முடியுமான்னுகேட்டேன். “அதற்கு அவர்கள் நீங்கள் எந்த வண்டியில வந்தீங்க சொல்லுங்கஎன்றனர். “நான் இது மாதிரி வேலூர் வண்டியில வந்தேன்என்றேன். “அது நம்ம கோட்டம் இல்ல. அது வேலூர் கோட்டம்ப்பா. அதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாதுஎன்று கைவிரித்து விட்டனர் பேருந்து நிலைய ஊழியர்கள்.
இருந்தாலும் ஒரு ஊழியர் மட்டும் என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி உடனடியாக அந்த நம்பருக்கு போன் போட்டார். அப்போது ஒருவர் எடுத்து பேசினார். “அவர் தெளிவாக சொன்னார் என்னுடன் பயணித்தவரின் மொபைல் என்னிடம் தான் இருக்கிறது. நான் தஞ்சாவூர் செல்கிறேன். அங்கிருந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வருவேன் வேண்டுமென்றால் அப்போது வாங்கிக் கொள்ளவும்என்று கூறியுள்ளார். அந்த விஷயத்தை அந்த ஊழியர் என்னிடம் கூறினார். உடனே நான் என்னுடைய மொபைலுக்கு மீண்டும் கால் பண்ணி, அவரிடம் பேசினேன். “சார் நான் உடனடியாக அடுத்த பேருந்தை பிடித்து தஞ்சாவூர் வருகிறேன். நீங்கள் தயவுசெய்து எனக்காக காத்திருக்குமாறு வேண்டினேன்”. உடனே அவரும் ஒப்புக் கொண்டார். உடனடியாக நான் அடுத்த பேருந்தை பிடித்து தஞ்சாவூர் புறப்பட்டேன். வழியிலேயே நான் அவருக்கு வேறு ஒருவரிடம் விஷயத்தை கூறி போனை கடன் வாங்கி அவரிடம் பேசினேன். “இது மாதிரி பாபநாசம் வந்து விட்டேன். இன்னும் 30 – 45 நிமிடத்தில் தஞ்சாவூர் வந்து விடுவேன் என்றேன். உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்குகிறதா? நீங்கள் அவசரமாக செல்ல வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய மொபைலை பேருந்து நிலையத்தில் உள்ள கஸ்டமர் செல்லில் கொடுத்து விட்டு செல்லுங்கள்என்றேன். “நீங்கள் இப்போது எங்கு இருக்கீறீர்கள். புது பேருந்து நிலையமா அல்லது பழைய பேருந்து நிலையமாஎன்று கேட்டுக் கொண்டேன். “அதற்கு அவர், நான் இன்னும் போய் சேரவில்லை. அங்கு நான் சேர்ந்ததும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்என்று கூறினார். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து அவர் மீண்டும் எனக்கு போன் செய்தார். அதாவது நான் கடன் வாங்கி பேசிய அந்த நம்பருக்கு. “அவர் இது மாதிரி தான் பழைய பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும், நான் உங்களுக்காக நீங்கள் இங்கேயே காத்திருப்பதாகவும்கூறி என்னை வியக்க வைத்தார். அதன் படி அவர் எனக்காக அங்கேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். நான் அங்கு அடைந்தவுடன் அவருக்கு போன் செய்து அவரைக் கண்டுபிடித்து, என்னுடைய உணர்ச்சிப் பூர்வமான நன்றிகளை அவருக்கு தெரிவித்து கொண்டேன்.
அவர் என்னிடம், “சார் நீங்கள் சொன்ன மாதிரி நான் வேண்டுமானால் உங்களுடைய மொபைலை கஸ்டமர் செல்லில் கொடுத்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர் உங்களிடம் கொடுப்பாரா? இல்லை உங்களை ஏமாற்றி விடுவாரோ? யாருக்கு சார் தெரியும்? நான் அவங்க யாரும் நம்ப தயாரா இல்லை. ஒரு வேளை அவன் ஏமாற்றிட்டு போயிட்டாலும், நீங்க என்ன கூட தப்பா நினைக்கலாம் இல்லையா? ச்சே எவ்வளவு இனிக்க இனிக்க பேசினான், கடைசியில மொபைலை தூக்கிட்டு போயிட்டான் பாரு கம்மினாட்டி நீங்களே என்னை திட்ட வேண்டிய சூழ்நிலை உருவாயிட கூடாதுன்னா தான் நானே உங்களுக்காக காத்திருந்து உங்க மொபைலை உங்க கிட்ட கொடுத்திட்டு போறேன்.” என்று சொன்னார். ( எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல! ) "மொபைல் போனா இன்னொரு மொபைல் போனா இன்னொரு மொபைல் வாங்கிக்கலாம். ஆனால் அந்த மொபைல்ல நீங்க வைச்சிருக்க அந்த காண்டாக்ட்ஸ் நீங்க திரும்ப சேகரிக்கறது தான் ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டம் என்னான்னு எனக்கு நல்லா தெரியும் சார். இனிமேல் இந்த மாதிரி மொபைலை தொலைச்சிடாதீங்க" என்று சொல்லி விட்டு பிரிந்தார்.

பிறகு நான், “சார் உங்களை மாதிரியான ஒரு நல்ல மனிதரை நான் இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லைஎன்றேன் மனமகிழ்வுடன். அந்த நிமிடம் வரை அவர் பெயரை கூட கேட்காமல், அவரை வற்புறுத்தி ஒரே ஒரு காபி மட்டும் அருந்தி விட்டு இருவரும் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு நான் மீண்டும் கும்பகோணம் செல்லும் வண்டியில் ஏறிச் சென்றேன்.
எந்தவிதமான பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் எனக்காக காத்திருந்த அவரின் அந்த பண்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. காலத்தால் என்றும் நினைவில் நின்றவர் வரிசையில் அவரை ஏற்றி வைத்து என் நெஞ்சம் அழகு பார்த்தது.
“நல்லவங்களுக்கு ஆண்டவன் நல்லவர்களை அதிகம் அறிமுகம் செய்து வைப்பான்” என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் காதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு பதிவு. இது ஒரு அனுபவ பதிவு. நான் பேருந்தில் பயணித்த போது, எனக்கும் ஒரு பெரியவருக்கும் ஏற்பட்ட நட்பு உரையாடலின் ஒரு தொகுப்பு. பதிவின் நீளம் கருதி இரண்டாகப் பிரித்துள்ளேன்.

வேலூர் பேருந்து நிலையத்தில் இரவு 9.00 மணிக்கு, தஞ்சாவூர் செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் கும்பகோணம் செல்ல வேண்டும். அங்குள்ள பேருந்து மணிகாப்பகத்திற்கு சென்று, நான் கேட்டேன், “தஞ்சாவூர் செல்லும் பஸ் வந்து விட்டதா?” அதேநேரத்தில் இன்னொரு நபரும், இதே கேள்வியை அந்த நடத்துனரிடம் கேட்டார். “இருவருக்கும் ஒரே பதிலாக 9.30 மணிக்கு தான், அதோ அந்த பக்கத்தில் காஞ்சிபுரம் செல்லும் பஸ்ஸிற்கு பக்கத்தில் வண்டி வந்து நிற்கும் என்று சொன்னார்.”


பிறகு நான் அவர் சொன்ன இடத்திற்கு சென்று நின்றேன். அவரும் அதே இடத்திற்கு வந்து நின்றார். இருவரும் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த பக்கத்தில் ஒரு பிராமண குடும்பம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், இன்றைக்கு நமக்கு இடம் கிடைப்பது சற்று கடினம் தான் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அதே சந்தேக மனத்துடன், அருகில் இருந்த அந்த நபரும் என்னருகே வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
"எனக்கு சொந்த ஊர் திமிரிங்க. நான் நிறைய தடவை ஆரணியிலிருந்து வண்டி ஏறியிருக்கிறேன். ஆனால் அங்க இருந்து ஏறினா உட்கார இடம் கிடைப்பதில்லை. அதனால் தான் திமிரியிலிருந்து நேரா வேலூர்க்கு வந்துட்டேன். இங்கே ஏறினா உட்கார இடம் கிடைக்குமில்ல என்று என்னிடம் கேட்டார் அந்த பெரியவர்."
நான் நிச்சயமாக கிடைக்கும் என்றேன். தொலை தூர பயணிகளுக்கு தான் முன்னுரிமை. நமக்கு இடம் கொடுத்த பிறகு தான் வழி டிக்கெட்டுகளை நடத்துனர் ஏற்றுவார் என்றேன். ஏனென்றால் சென்ற வாரம் தான் நான் இதே வண்டியில் பயணித்தேன். அந்த நடத்துனர் அப்படி தான் செய்தார். இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்தால் நாம் இடம் பிடிப்பது சற்றே கடினம் என்றேன். அவரும், “ஆமாம், அருகிலிருந்த அந்த பிராமண குடும்பத்தை பார்த்து சொன்னார்”. “இவர்கள் எங்கு செல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் ஏறினால் நிச்சயம் நமக்கு இருக்கை கிடைப்பது சற்றே கடினமான விஷயம் தான் என்றோம்இருவரும் ஒருமித்தாக.
சரி பார்த்துவிடலாம்! இருவருக்கும், ஒரு ஒரு இருக்கை தானே தேவை. எனவே எளிதாக பிடித்துவிடலாம். பயப்பட வேண்டாம் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டோம். மணி 9.30 தே ஆகிவிட்டிருந்தது. ஆனால் இன்னும் பேருந்து வந்தபாடில்லை. மணி 9.35க்கு வந்தது, வரும்போதே அதில் பயணிகள் ஓடிப் போய் ஏறி இருக்கையைப் பிடித்தனர். நானும், பெரியவரும் ஏறிச்சென்றோம். அவர் முதலில் இருக்கையைப் பிடித்தார். நானும் அவர் அருகிலேயே ஜன்னல் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டேன்.
அந்த பெரியவர் தொடர்ந்து பேச்சுக் கொடுக்கலானார். "அவர் திமிரியில் நெல் வியாபாரம் செய்துக் கொண்டிருப்பதாகவும், ஒரு நாள் தான் அங்கு இல்லை என்றால் லட்சக்கணக்கில் பணப்பட்டுவாடா பாதிக்கப்பட்டுவிடும்" என்றும் கூறினார். அவரிடம் கடன் வாங்க வரும் விவசாயிகளின் மனநிலையைப் பற்றிக் கூறினார். "அவர்களுக்கு கம்ப்யூட்டர் கொண்டு கணக்கு போட்டு நான் சொல்லிவிட்டால், அவர்களை நான் என்னமோ ஏமாற்றி விடுவதுபோல், விவசாயிகள் குறைகூறுவதாகவும், அதனால் அவர்களுக்கு உரிய முறையில் பழைய காலத்துப் பாணியில் இன்னமும் கணக்கு நோட்டுகளை கொண்டு கணக்கு எழுதிவைத்து, அவர்களை அரை மணி நேரம் உட்கார வைத்து, கணக்கு போட்டு பிறகு இவ்வளவுதான் உன்னுடைய பாக்கி, என்று சொன்னால் தான் அவர்கள் நம்புவார்கள்" என்று வெள்ளந்தியாக சொன்னார்.
அவர் அடுத்தாக, இந்த தலைமுறையினரின் திருமண விசேஷங்களையும் சற்றே கடுமையாக விமர்சித்தார். "முன்பெல்லாம் திருமண என்றால் ரெண்டு நாளைக்கு முன்னரே குடும்பத்துடன் சென்று விடுவார்கள். கல்யாணம் முடிந்த பிறகு தான் சொந்தக் காரர்கள் எல்லாம் போவார்கள். இன்று காலம் ரொம்ப மாறிப் போச்சு, இன்னைக்கு குடும்பத்துக்கு ஒருத்தர் மட்டும் தான் தலைக்காட்டுறாங்க. அதுவும் ரிசெப்ஷன் மட்டும் தான், காலையில கல்யாணத்தப்ப தாலிக் கட்டும் போது வெறும் 100, 200 பேரு தான் இருக்காங்க. அதோட ரொம்ப ரொம்ப மோசமான விஷயம் என்னவென்றால், கல்யாணத்திற்கு பட்ஜெட் போடும் போது, “சரக்குக்கும்சேர்த்து போடுகிற பழக்கம் வந்துவிட்டது. இது எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவினை காட்டுகிறது" பாருங்கள். சின்னதுல இருந்து பெருசுங்க வரைக்கும் குடிச்சுட்டு ஆட்டம் போட்டே ஆகனும் என்கிற மனப்பான்மை வந்துடுச்சி.(….. என்ன கொடுமை சார்……!!!!!)
அடுத்து இந்த காலத்து பசங்களைப் பற்றி சொன்னார். "பசங்களுக்கு மொபைல் வாங்கிக் கொடுக்கிறதுல தப்பு இல்லஆனால் அவங்க அதை வைச்சிக்கிட்டு என்ன பண்ணறாங்க அப்படின்னு கவனிக்கறது இல்ல….அதே மாதிரி பசங்களுக்கு, வண்டி வாங்கி தரதும் தப்பு இல்ல. ஆனால் அதே சமயத்துல ஒரு கண்ட்ரோல்ல வச்சுகிடணும்.. ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் கோட்டாஎன்று ஒதுக்கி அதை உபயோகப்படுத்த பழக்கணும். காலையில எழுந்து போயி மார்க்கெட் போயி, ஏதாவது வாங்கி வரப் பழக்கணும், மீதி காசை தவறாமா கணக்கு பார்த்து வாங்கணும். இந்த மாதிரியெல்லாம் இப்ப யார் பண்றா?"
"மனுஷன் சாப்படற உணவே விஷமாயிடுச்சு" என்றார். முன்பெல்லாம் வர அரிசியை சமைச்சி சாப்பாட்டால் ஒரு குண்டான் சாதத்தை ஒரே ஆள் சாப்பிடலாம். நிறைய சாப்பிடலாம். ஒன்னும் ஆகாது. ஆனால் இப்ப வர அரிசியை சமைத்து, இரண்டு அன்னக்கை சாதம் சாப்பிட்டாலே வயிறு ரொம்பிடுது. அந்த அளவிற்கு உரங்கள் அரிசியினை விஷமாக்கிடுச்சு. முன்னெல்லாம் மீந்துபோகிற சாதத்தை தண்ணி ஊத்தி வைத்து அடுத்த நாள் பழையதா சாப்பிடல்லாம். ஆனால் இப்ப வர சாதத்தை அடுத்த நாள் சாப்பிட போனால் ஒரே பிசு பிசுன்னு ஒட்டுது. போதக்குறைக்கு வாடை வேற வருகிறது. சாப்பாடே விஷமாயிடுச்சு."
"பார்த்தீனியம் செடிப் பற்றி  நீங்கள் கேள்விப்பட்டிருக்கீங்களா" என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் "தெரியாது" என்றேன். உடனே அவர், "1970 களில் இந்தியாவில் உணவு பற்றாக்குறை தலைவிரித்தாடிய சமயம் அது. அந்த சமயத்தில் இந்தியா, அமெரிக்காரன் கொடுக்கிற கோதுமைக்காக கப்பல் எப்ப வருமென்று காத்துகொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்துல தான் அவன் கொடுத்த அந்த கோதுமையோட பார்த்தீனிய செடிகளோட விதைகளும் கலந்து வந்துடுச்சி. அவன் கொடுத்த அந்த கோதுமையை சளித்து அந்த விதைகளை நம்ம ஆளுங்க தூக்கி கொட்டினாங்க. அவங்க கொட்டின அந்த இடமெல்லாம் இந்த பார்த்தீனியம் என்கிற விஷச் செடி முளைச்சு காடா மாறிடுச்சு. இந்த செடி முளைச்சிட்டா அந்த நிலத்துல வேற எதையும் பயிரிட முடியாது. மேலும் அந்த விதையோட வீரியமும் பல மாசங்களுக்கு அப்படியே இருக்கும். அதாவது அந்த விதைகள் மண்ணுக்குள் 3 லிருந்து 6 மாசம் இருந்தாலும், அதை மீண்டும் வெளியே எடுத்து போட்டாலும் அது செடியாக வளர்ந்து விடும். அந்த அளவிற்கு மோசமான அந்த விஷச் செடி இப்ப தமிழகம் முழுவதும் பரவி பாதி விளை நிலைங்களை ஆக்கிரமித்து இருக்கிறது" என்றார்.
"பழைய சோறும், மாம்பழம் சேர்ந்து சாப்பிடற போது கிடைக்கிற பலம் வேற எதுலயும் கிடையாது. இன்றைக்கு தாம்பத்தியல பல பேருக்கு திருப்தி இருக்கிறது இல்லை. அதற்கு என்னென்னமோ சாப்பிட்டு பார்க்கிறான், ஒன்னும் சரியாக மாட்டேங்கிறது. ஆனால் அந்த காலத்துல பையன் கட்டுக்கடங்கமா திரிஞ்சா அவனுக்கு கொடுக்கிற சோற்றையும், மாம்பழத்தையும் குறைக்க சொல்லுவாங்க. அதாவது பழைய சோற்றையும் மாம்பழத்தையும் தொடர்ந்து 6 மாசம் சாப்பிட்டு வந்தா போதும், அந்த பையனுக்கு ஒரு பொன்னை தொட்டு பார்க்கணும்னும், அடையுனும்ன்னும் ஒரு வெறியே வருமாம். ஆனால் இன்றைக்கு அதோட மகத்துவம் யாருக்கும் தெரியவில்லை." என்று மாம்பழத்தை பற்றி நமக்க தெரியாத ஒன்றையும் கூறினார். 


(........தொடரும்)