கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 17 ஆகஸ்ட், 2011

வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை - 2


வேலூரிலிருந்து தஞ்சாவூர் வரை -2 (தொடர்ச்சி.....)

“அது மாதிரி சாப்பிடற சாப்பாட்டுலயே பாதி விஷயம் அடங்கியிருக்கு” என்று சொல்லி விட்டு ஒரு குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் ஒரு ராஜா கடுமையான வயிற்று வலியினால் துடித்து வந்தான். அவனுக்கு அரண்மனை வைத்தியர்கள் பலரும் பலவிதமான மருந்துங்கள் கொடுத்தும், அவருக்கு வயிற்று வலி மட்டும் நின்ற பாடில்லை. இறுதியில் அந்த ராஜா, “என்னுடைய வயிற்று வலியை போக்குபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்” என்று அறிவித்தார். அப்போதும் பலர் முயன்றும் பலன் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வயிற்று வலியின் கடுமை அதிகமாகி அவரால் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாமல் போனது. “நாட்டிற்கே ராஜா ஆகியும் கூட என்னால் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியவில்லையே” என்று மிகவும் வருத்தபடலனார் அந்த ராஜா. இந்த நிலையில் ஒரு முனிவரை சந்தித்தார் ராஜா. ராஜா தன் கஷ்டங்களை அவரிடம் சொன்னார். தனக்கு ஏதேனும் உபாயம் கூறும் படி மன்றாடினார். “சரி, நான் உன்னுடைய நோயை குணப்படுத்துகிறேன்” என்று கூறினார் முனிவர். “நான் சொல்லும் படி மட்டும் நீங்கள் செய்து கொண்டு வாருங்கள் நீங்கள் நிச்சயம் குணமடைவீர்கள்” என்று சொன்னார் முனிவர். “நீங்கள் தினமும் சாப்பிடுவதற்கு முன்னர் நீங்கள் உண்ணும் உணவின் ஒரு பகுதியை காக்கைக்கு இட வேண்டும். அந்த காகம் உண்டபிறகே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். காகம் சாப்பிடமால் நீங்கள் சாப்பிட கூடாது. இவ்வாறு தொடர்ந்து 6 மாதங்கள் செய்து வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்த நோய் குணமாகிவிடும், இதற்கு வேறு எந்த மருந்தும் வேண்டாம்.” என்று சொல்லி அனுப்பினார் அந்த முனிவர்.
அதன்படியே அந்த ராஜாவும் முதலில் காகத்திற்கு உணவினை வைத்துவிட்டு, காகம் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். காகம் வந்து அமர்ந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமல் திரும்பி சென்று விட்டது. காகம் சாப்பிடாததால் அந்த உணவினை கொட்டிவிட்டு ராஜா சென்று விட்டார். இப்படியே ஏழு நாட்களானது, அதே நிகழ்வு திரும்ப திரும்ப நடந்தது. ஆனால் காகம் சாப்பிட வில்லை. ராஜா வழக்கம் போல காகத்திற்கு உணவிட்டு திரும்பினார். அன்று ராஜா தன்னை அறியாமல் திருப்தியாக உணவருந்தினார். வெளியே வந்து பார்த்தார், திடீரென்று அந்த காகம் வந்து, அந்த ராஜா இட்ட உணவினை உண்ண ஆரம்பித்தது. ராஜாவிற்கு மிகுந்த சந்தோஷம். தற்போது ராஜா தினமும் மகிழ்ச்சியோடு காகத்திற்கு உணவிட்டு, பின்னர் தானும் நல்லபடியாக உணவருந்தினார்.
இப்படியே 6 மாதங்கள் கடந்து விட்டன. ராஜாவும் நல்ல உடல்நிலைக்கு வந்துவிட்டார். இப்போது வயிற்று வலியெல்லாம் இல்லை. அவர் ஆச்சரியத்துடன் தனக்கு உபாயம் சொன்ன அந்த முனிவரை நினைவு கூர்ந்தார். உடனே அந்த முனிவரை பார்க்க சென்றார், அந்த முனிவரிடம் சென்று ராஜா நடந்ததை சொன்னார். “தற்போது தனக்கு வயிற்று வலியெல்லாம் இல்லையென்றும், தற்போது தன்னால் நன்றாக சாப்பிட முடிகிறதென்றும்” சொன்னார். ராஜா, “முனிவரிடம் தனக்கு உடல்நிலை எந்த மருந்தும் சாப்பிடாமல் எப்படி சரியனாது” என்று தாங்கள் எனக்கு விளக்க வேண்டுமென்றார். அதற்கு அந்த முனிவர், “ராஜாவே தாங்கள் தினமும் காகத்திற்கு உணவிட்டு காத்துக் கொண்டிருக்கும் போது, அந்த காகம் வந்து பார்க்கும் போது, நீங்கள் உணவருந்தாமல் காக்கைக்கு உணவளிப்பதை கண்ட காகம் நீங்கள் முதலில் உணவருந்த வேண்டும்” என்று ஆசைப்பட்டது. அது தொடர்ந்து அவ்வாறே தனது ஆசையை வெளியிட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த காகத்தின் எண்ண அலைகள் உங்களை தாக்கி உங்களை உணவருந்த வைத்தது. தாங்கள் உணவருந்திய பின்னர் அந்த காகம் தாங்கள் இட்ட உணவினை உண்டு மகிழ்ந்தது. காகத்தின் நல்ல எண்ணமே நீங்கள் குணமாக காரணம்” என்று கூறினார்.  ராஜா அதை கேட்டு மிகுந்த சந்தோஷடத்துடன் முனிவரிடம் ஆசிப் பெற்று திரும்ப சென்றார்” என்று கூறி கதையை முடித்தார்.
“இவ்வாறு மனிதனை எண்ண அலைகள் எவ்வாறெல்லாம் தாக்குகின்றன” என்பதை எளிய கதையின் மூலம் தெளிவாக விளக்கினார் பெரியவர்.
திடீரென்று ஒரு ஜோதிடப் பாடல் ஒன்றையும் பாடிக் காட்டி அதற்கு விளக்கம்கூறியும் அசத்தினார் அந்த பெரியவர்.
அவரிடம் தொடர்ந்து நான் பேசிக்கொண்டே இருந்த போது, அவருடைய பலத்தரப்பட்ட பட்டறிவு விஷயங்கள் என்னை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் மேலும் மிகுந்த அடக்கதுடன், நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என்று கூறியது எனக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
பிறகு இருவருமே உறங்க ஆரம்பித்தோம். பிறகு நெய்வேலியில் பேருந்து ஒரு முறை நின்றது. பிறகு மாயவரத்தில் ஒரு முறை நின்றது. பிறகு அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் கும்பகோணத்திற்கு முன்பே உள்ள ஒரு ஊர் என்பதால், மாயவரத்திற்கு பிறகு உறங்காமல் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருந்தேன். ஆனால் என்னை அறியாமல் நான் நன்றாக உறங்கி விட்டதால், திடீரென்று முழிப்பு வந்து எழுந்து பார்த்தால், நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டிருந்தது. உடனடியாக நான் என்னுடைய குச்சிப் பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அவருக்கு பிரியா விடை சொல்லி விட்டு நடத்துனரிடம் சென்று சொல்லி பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். இறங்கிய மறு நிமிடமே, என்னுடைய பேண்ட் பையிலிருந்த மொபைலை பேருந்திலேயே விட்டு விட்டேன் என்று உணர்ந்தேன். மறு கணமே பேருந்தை தட்டினேன். ஆனால் பேருந்து நிற்காமல் விருட்டென்று பறந்து சென்று விட்டது. அந்த ஊரில், அந்த அதிகாலை 4 மணிக்கு என்னுடன் இறங்கிய ஒரே நபர். உடனே அந்த நபர் என்னிடம் விசாரிக்க நான் என்னுடைய மொபைலை வண்டியிலேயே விட்ட விஷயத்தை சொன்னவுடன், அவரும் அவருடைய மொபைலைக் கொடுத்து என்னுடைய மொபைலுக்கு கால் பண்ண சொன்னார். கால் பண்ணி பார்த்தேன். யாரும் எடுக்கவில்லை. உடனடியாக அடுத்த வண்டியை பிடித்து கும்பகோணம் போய் பார்த்து விடலாம் என்று ஒரு இரண்டு நிமிடம் காத்திருந்து பார்த்தேன். ஆனால் அடுத்து எந்த பேருந்தும், ஆட்டோவும் வரவில்லை. என்னுடைய வீடு அருகிலேயே இருந்ததால், உடனடியாக வீட்டிற்கு சென்று என்னுடைய மனைவியிடம் விஷயத்தை கூறி விட்டு, பைகளை போட்டு விட்டு, இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்றேன். அதற்குள் அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டிருந்தது. அங்கு சென்று பேருந்து நிலைய ஊழியர்களிடம் உதவிகள் கேட்டேன். “ஆனால் எல்லோரும் ஒட்டு மொத்தமாக நிச்சயமா யாராவது எடுத்துட்டு இருப்பாங்க”. “என்ன சார் இப்படி இருக்கீங்க!”. “இப்ப எல்லாம் மொபைலை எடுத்தவுடனே சுவிட்ச் ஆப் பண்ணி சிம் கார்டை கழற்றி போட்டுறானுங்க”. “நிச்சயமா கிடைக்காது சார்” என்றனர் கோரசாக.
அப்போது நான் சொன்னேன். “சார் என்னுடைய மொபைலை பத்திரமாக என்னுடன் பயணித்த பக்கத்து சீட்டுக்காரர் நிச்சயமாக எடுத்து வைத்திருப்பார். நீங்கள் தயவுசெய்து தகவல் மட்டும் கொடுங்க என்றேன் நம்பிக்கையாக”. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
என்ன செய்யறதுன்னு எனக்கும் ஒன்னும் புரியல. “தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து தகவல் கொடுத்து எடுத்து வைக்க முடியுமான்னுகேட்டேன். “அதற்கு அவர்கள் நீங்கள் எந்த வண்டியில வந்தீங்க சொல்லுங்கஎன்றனர். “நான் இது மாதிரி வேலூர் வண்டியில வந்தேன்என்றேன். “அது நம்ம கோட்டம் இல்ல. அது வேலூர் கோட்டம்ப்பா. அதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாதுஎன்று கைவிரித்து விட்டனர் பேருந்து நிலைய ஊழியர்கள்.
இருந்தாலும் ஒரு ஊழியர் மட்டும் என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி உடனடியாக அந்த நம்பருக்கு போன் போட்டார். அப்போது ஒருவர் எடுத்து பேசினார். “அவர் தெளிவாக சொன்னார் என்னுடன் பயணித்தவரின் மொபைல் என்னிடம் தான் இருக்கிறது. நான் தஞ்சாவூர் செல்கிறேன். அங்கிருந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வருவேன் வேண்டுமென்றால் அப்போது வாங்கிக் கொள்ளவும்என்று கூறியுள்ளார். அந்த விஷயத்தை அந்த ஊழியர் என்னிடம் கூறினார். உடனே நான் என்னுடைய மொபைலுக்கு மீண்டும் கால் பண்ணி, அவரிடம் பேசினேன். “சார் நான் உடனடியாக அடுத்த பேருந்தை பிடித்து தஞ்சாவூர் வருகிறேன். நீங்கள் தயவுசெய்து எனக்காக காத்திருக்குமாறு வேண்டினேன்”. உடனே அவரும் ஒப்புக் கொண்டார். உடனடியாக நான் அடுத்த பேருந்தை பிடித்து தஞ்சாவூர் புறப்பட்டேன். வழியிலேயே நான் அவருக்கு வேறு ஒருவரிடம் விஷயத்தை கூறி போனை கடன் வாங்கி அவரிடம் பேசினேன். “இது மாதிரி பாபநாசம் வந்து விட்டேன். இன்னும் 30 – 45 நிமிடத்தில் தஞ்சாவூர் வந்து விடுவேன் என்றேன். உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்குகிறதா? நீங்கள் அவசரமாக செல்ல வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய மொபைலை பேருந்து நிலையத்தில் உள்ள கஸ்டமர் செல்லில் கொடுத்து விட்டு செல்லுங்கள்என்றேன். “நீங்கள் இப்போது எங்கு இருக்கீறீர்கள். புது பேருந்து நிலையமா அல்லது பழைய பேருந்து நிலையமாஎன்று கேட்டுக் கொண்டேன். “அதற்கு அவர், நான் இன்னும் போய் சேரவில்லை. அங்கு நான் சேர்ந்ததும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்என்று கூறினார். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து அவர் மீண்டும் எனக்கு போன் செய்தார். அதாவது நான் கடன் வாங்கி பேசிய அந்த நம்பருக்கு. “அவர் இது மாதிரி தான் பழைய பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும், நான் உங்களுக்காக நீங்கள் இங்கேயே காத்திருப்பதாகவும்கூறி என்னை வியக்க வைத்தார். அதன் படி அவர் எனக்காக அங்கேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். நான் அங்கு அடைந்தவுடன் அவருக்கு போன் செய்து அவரைக் கண்டுபிடித்து, என்னுடைய உணர்ச்சிப் பூர்வமான நன்றிகளை அவருக்கு தெரிவித்து கொண்டேன்.
அவர் என்னிடம், “சார் நீங்கள் சொன்ன மாதிரி நான் வேண்டுமானால் உங்களுடைய மொபைலை கஸ்டமர் செல்லில் கொடுத்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர் உங்களிடம் கொடுப்பாரா? இல்லை உங்களை ஏமாற்றி விடுவாரோ? யாருக்கு சார் தெரியும்? நான் அவங்க யாரும் நம்ப தயாரா இல்லை. ஒரு வேளை அவன் ஏமாற்றிட்டு போயிட்டாலும், நீங்க என்ன கூட தப்பா நினைக்கலாம் இல்லையா? ச்சே எவ்வளவு இனிக்க இனிக்க பேசினான், கடைசியில மொபைலை தூக்கிட்டு போயிட்டான் பாரு கம்மினாட்டி நீங்களே என்னை திட்ட வேண்டிய சூழ்நிலை உருவாயிட கூடாதுன்னா தான் நானே உங்களுக்காக காத்திருந்து உங்க மொபைலை உங்க கிட்ட கொடுத்திட்டு போறேன்.” என்று சொன்னார். ( எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல! ) "மொபைல் போனா இன்னொரு மொபைல் போனா இன்னொரு மொபைல் வாங்கிக்கலாம். ஆனால் அந்த மொபைல்ல நீங்க வைச்சிருக்க அந்த காண்டாக்ட்ஸ் நீங்க திரும்ப சேகரிக்கறது தான் ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டம் என்னான்னு எனக்கு நல்லா தெரியும் சார். இனிமேல் இந்த மாதிரி மொபைலை தொலைச்சிடாதீங்க" என்று சொல்லி விட்டு பிரிந்தார்.

பிறகு நான், “சார் உங்களை மாதிரியான ஒரு நல்ல மனிதரை நான் இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லைஎன்றேன் மனமகிழ்வுடன். அந்த நிமிடம் வரை அவர் பெயரை கூட கேட்காமல், அவரை வற்புறுத்தி ஒரே ஒரு காபி மட்டும் அருந்தி விட்டு இருவரும் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு நான் மீண்டும் கும்பகோணம் செல்லும் வண்டியில் ஏறிச் சென்றேன்.
எந்தவிதமான பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் எனக்காக காத்திருந்த அவரின் அந்த பண்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. காலத்தால் என்றும் நினைவில் நின்றவர் வரிசையில் அவரை ஏற்றி வைத்து என் நெஞ்சம் அழகு பார்த்தது.
“நல்லவங்களுக்கு ஆண்டவன் நல்லவர்களை அதிகம் அறிமுகம் செய்து வைப்பான்” என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் காதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.