தலைப்பைப் பார்த்துவிட்டு 'ஜோதிடம்' எழுதறதை விட்டுவிட்டு 'கவிதை' எழுதப் போயிட்டேன்னு நினைக்காதீங்க.
"கன்னியின் கடைக்கண் பார்வைப் பட்டு விட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் மடுவாம்" என்றான் பாவேந்தன்.
பார்வைக்கு இத்தனை சக்தி உண்டோ என்று நீங்கள் வியந்தீர்களானால், நீங்கள் இன்னும் எந்த மச்சக் கன்னியாலும் வீழ்த்தப் படவில்லை என்றே பொருள். ( ஐய்யோ பாவம்!).
எனக்கு தெரிந்த ஒரு 'நண்பர்' எங்க ஏரியாவுல ஒரு டைலர் கடையில் வேலைப் பார்த்து வந்தார். அந்த ஏரியாவில் போற வரவங்களை எப்பவும் பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டு இருப்பார். அப்படி ஒரு நாள் அந்த பக்கமா அந்த ஏரியாவிலுள்ள (சொல்லணும்னா 2, 3 தெரு தள்ளியிருக்கிற வீட்டிலிருந்து ) ஒரு 'சுமாரான அழகிய பெண்' ஏதேச்சையா அந்த பையனை தெரியத்தனமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டாள். அவனுக்கு அன்றிலிருந்து பிடித்துவிட்டது 'பித்து'. 'ஆம்'. 'அவள்' என்னை தான் பார்த்தாள். 'நான்' அந்த பொன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கூறிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு எப்பப் பார்த்தாலும் அவள் வீட்டை சுற்றி சுற்றி வந்துக் கொண்டேயிருக்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் இவனது செய்கை அந்த பொன்னுக்கும் தெரிய வந்தது. இந்த பையன் தன்னை தான் பார்க்க வருகிறான் என்பதை அறிந்து கொண்டாள். அதை அவள் உள்ளுக்குள்ளே ரசித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.(பெரும்பான்மையான பெண்களுக்கு ஒரு பையன் தன் பின்னாடி சுத்தறது, உள்ளுக்குள்ள பெருமையான விஷயமாக இருந்தாலும் அதை அவங்க வெளியில காட்டிக்கிறது இல்லை). அதே நிலை தான் இந்த பையனுக்கும். நான் அந்த பையனை சந்திக்கும் போதே அவன் இரண்டு ஆண்டுகளாக இந்த பணியை தன் தலையாய கடமையாக செய்து வருகிறான் என்பதை தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு அவன் அந்த பெண்ணின் அப்பாவிடம் அடிவாங்கியது, அதன் பின்னர் அவன் 'பித்து' தெளிய எல்லாம் சுமாரா 4 வருடத்திற்கு மேல் ஓடிடிச்சிங்க. இதெல்லாம் எதனால் வந்தது, அவள் வீசி சென்ற ஒரே 'ஒரு பார்வையால்' வந்தது. அந்த பார்வையால் தான் அவன் 4 வருடங்கள் அவள் பின்னால் நாயாக சுற்றினான். அதாங்க கன்னியின் பார்வைக்கு உள்ள வலிமை. இந்த மாதிரி "ஒரு பார்வையால் வீழ்ந்தவங்களும் இருக்காங்க, நல்லா வாழ்ந்தவங்களும் இருக்காங்க".
நான் சொல்ற இந்த கதையெல்லாம் சுமார் நடந்து 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இப்ப எல்லாம் யார் இந்த மாதிரியெல்லாம் இருக்காங்க. இப்ப இருக்கிற டிரெண்டே வேற. சரி விஷயத்திற்கு வருவோம். சாதாரண ஒரு கன்னியின் பார்வைக்கே இந்த அளவுக்கு பவர் இருக்குன்னா, மகா வலிமையும், சக்தியும் படைத்த கிரகங்களின் பார்வைகள் மட்டும் சளைத்தவையா என்ன?
கிரகங்களின் பார்வை
ஒவ்வொரு கிரகங்கத்திருக்கும் பார்வைகள் உண்டு. பார்க்கும் பார்வையினாலே கிரகங்கள் நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும்.
பொதுவாக எல்லாக் கிரகங்களுக்கும் 'ஏழாம் பார்வை' என்பது உண்டு. அதாவது தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது இடத்தை பார்வையிடுவார்கள். இது போக 'சிறப்புப் பார்வைகளும்' உண்டு.
குருவுக்கு 7ம் பார்வை தவிர 5ம் பார்வை மற்றும் 9ம் பார்வைகள் உண்டு.
அதே போல் செவ்வாய்க்கு 4ம் பார்வை மற்றும் 8ம் பார்வைகள் உண்டு.
சனிக்கு 3ம் பார்வை மற்றும் 10ம் பார்வை உண்டு.
ஆக குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் தான் 'சிறப்பு பார்வை' உண்டு. மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது.
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது.
சனிக்கு ஸ்தான பலம் உண்டு. ஆனால், பார்வை பலம் உடைய கிரகம் என்றால் அது குரு தான். "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பது ஜோதிடம் அறியாதவர்கள் வாயில் இருந்து கூட வருவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். "சனியின் பார்வை மிகக் கொடியது" என்றே எல்லா நூல்களும் குறிப்பிட்டுள்ளன. இருந்தாலும் சனியானவர் அந்த ஜாதகத்திற்கு 'சுபரா' அல்லது 'பாவரா' என்று பார்க்க வேண்டும். சனி சுபராகின், சனியின் பார்வை கூட நன்மை செய்யக் கூடியது தான்.
பொதுவாக சனி தான் பார்க்கும் இடத்தை கெடுக்க கூடியதாகும். ஆனால் எந்தவொரு கிரகமும் தன் சொந்த வீட்டைப் பார்த்தால் அது நன்மை பயக்குவதாகவே அமையும். தீய கிரகங்களின் சேர்க்கை இருந்து, அது மிகுந்த தீமை பயக்குவதாக இருக்குமேயானால், அதனை சுபக் கிரகங்களின் 'பார்வை' அந்த தீய பலனை குறைக்கும் சக்தி உடையதாகும்.
"கிரகங்களின் பார்வை பலம் வாழவும் வைக்கும், வீழவும் வைக்கும்."
இந்த கிரகங்களின் பார்வைப் பற்றி பலர் அறிந்து வைத்திருந்தாலும், என் வலைப் பதிவில் இதனை பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன்.