கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ராஜாவும் ஆண்டியும்!


ஒரு நாட்டின் ராஜா தன் நாட்டை மிகத் திறமையாக ஆண்டு வந்தான். அவன் அந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். நாட்டிலே மக்கள் எல்லோரும் செல்வ செழிப்போடு பசி பட்டினி இல்லாமல் நன்றாக வாழ்ந்து வந்தனர்.  நல்ல உடை, நல்ல தானிய விருத்தி என்று எல்லா வகையிலும் தன்னிறைவு கண்டு நாட்டை ஆண்டு வந்தான். சிறிய நாடு என்றாலும் மக்களோட ஆதரவைப் பெற்று நன்றாகவே ஆண்டு வந்தான். அவனுடைய கஜானாவும் நிரம்பி வழிந்தது. சகல வசதிகளுடன் ராஜா நன்றாகவே அந்த அரண்மனையில் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனுக்கோ அந்த பாழாய் போன தூக்கம் மட்டும் இல்லாமல் நெடு நாளாய் தவித்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் ராஜா தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். அப்போது காட்டில் அந்த வழியாக ஒரு மானை ஒரு சிங்கம் வேட்டையாட நினைத்து துரத்தி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட வந்த மந்திரி, "அரசே! நாம் சென்று விடலாம் இல்லையேல் நாம் இந்த சிங்கத்திடன் மாட்டிக் கொண்டு விடுவோம். இந்த மானிற் பதிலாக நாம் இரையாகி விடுவோம்". என்று எச்சரித்தார். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தாமல், "அது வீரனுக்கு அழகல்ல! அந்த சிங்கத்திற்கு முன்பாக நாம் தான் அந்த மானை வேட்டையாட வேண்டும், இது என் கட்டளை ம்ம்ம் பிடியுங்கள்" என்றார். வேறு வழியின்றி ராஜாவின் உத்தரவை மற்றவர்கள் நிறைவேற்ற எத்தனித்தனர். சிங்கத்தோடு சேர்ந்து ராஜாவும் அவரது பரிவாரங்களும் அந்த மானை துரத்த ஆரம்பித்தனர். சிங்கத்தினை பயமுறுத்த என்னென்ன வழிகளுண்டோ அத்தனையும் பிரயோகப்படுத்தினர். ஒரு வழியாக அந்த சிங்கம் இவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடி விட்டது. பின்னர் அந்த மானோ இவர்களைக் கண்டு ஓட ஆரம்பித்தது.

அந்த மானை விடாமல் இவர்களும் துரத்தினர். அது ஓடி ஓடி அங்குள்ள ஒரு ஆசிரமக் குடிலுக்குள் சென்று விட்டது. மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த எழில் கொஞ்சும் சோலைக்குள் ராஜாவும் அவரது பரிவாரங்களும் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து மானைத் தேட ஆரம்பித்தனர். அந்த மான் அங்குள்ள ஒரு ஆண்டியிடம் சரணைடைந்திருந்தது. அந்த ஆண்டியோ நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தார். அந்த ராஜாவுக்கோ எப்படியாவது அந்த மானை பிடித்துவிட வேண்டுமென்று அவா எனவே தன் பரிவாரங்களுக்கு கட்டளையிட்டான், "ம்ம்ம் பிடித்து வாருங்கள் என்றான்". அப்போது ஒரு சேவகன் முன்னே சென்று அந்த மானைப் பிடிக்க சென்றான். மானின் குரல் கேட்டு அதுவரை நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த அந்த ஆண்டி விழித்து விட்டார். அந்த ஆண்டி அப்போது "நில்" என்றார். வந்திருப்பவர்கள் யார் என்பதினையும் ஆண்டி அறிந்து கொண்டார். அதேபோல் ராஜாவும் ஆண்டியை சில கண நேரம் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஆண்டி, "குடிலுக்குள் வந்த மான் இன்றிலிருந்து எனக்கே சொந்தம்" என்று சொன்னார். மேலும் எந்தவொரு ஜீவனும் தஞ்சம் என்று வந்துவிட்டால் அதற்கு பாதுகாப்பு அளிப்பது நம் கடமை, அந்த வகையில் இந்த மானைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையே. இந்த மானை வேட்டையாட உங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்றார் பணிவுடன். ராஜாவோ அது எப்படி மானை என்னிடம் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றான். ஆனால் ஆண்டியோ நீங்கள் போகலாம் என்றார். ராஜாவோ மறுப்பு எதுவும் சொல்லாமல் தன் பரிவாரங்களுடன் அரண்மனைக்கு திரும்பினார்.


அன்றிரவும் ராஜாவுக்கோ வழக்கம் போல உறக்கம் வரவேயில்லை. ராஜாவோ ஆண்டியைப் நினைத்துப் பார்த்தான். அந்த ஆண்டியின் சாந்தமும், நாம் வரும்போது அவர் எந்த கவலையுமில்லாமல் உறங்கி கொண்டிருந்த தன்மையும், அதுமட்டுமில்லாமல் தான் ஒரு ராஜா என்பதை அறிந்தபிறகும் அவரிடம் எந்தவித மாற்றமும் இல்லாமல் தன்னை மறுத்து பேசியதும், மேலும் அந்த ஆண்டியின் பேச்சை மறுத்துப் பேசமுடியாமல் தான் அரண்மனை திரும்பியதும் ராஜாவிற்கோ வியப்பினை உண்டு பண்ணியது. நான் ஒரு ராஜா, இங்கே பட்டு மேத்தையில் அரண்மனையில் சகலவிதமான சவுகரியங்களுடன் இருந்தாலும் நான் பெரும்பாலான நேரங்களில் சரியாக உறங்கியதே இல்லை. ஆனால் நான் இன்று கண்ட அந்த காட்சி, அந்த ஆண்டி நாம் அங்கே சென்றபோது அவர் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்ததும், அவரிடம் இருந்த அந்த சாந்தமும், அந்த பூத்துக் குலுங்கும் சோலையும் மன்னன் நெஞ்சை விட்டு அகலவில்லை. 

பொழுதும் புலர்ந்தது. மன்னன் எழுந்தவுடன் நேராக அந்த காட்டிலுள்ள குடிலை நோக்கி பிராயணிக்கலானான். ராஜா அந்த ஆண்டியை கண்டான். அந்த ஆண்டியோ தன் காலை உணவிற்காக அங்குள்ள மரங்களிலுள்ள பழங்களை பறித்து கொண்டிருந்தார். ராஜாவை கண்டவுடன் என்ன ராஜனே மீண்டும் மானை பிடிக்க வந்தாயோ? என்றார். ஐய்யா நிச்சயமாக இல்லை. நானோ ஒரு ராஜன். எனக்கென்று அரண்மனையுண்டு சகல வசதிகளும் உண்டு. ஆனால் எனக்கோ சரியாக உறக்கம் மட்டும் வருவதேயில்லை ஆனால் நீங்களோ குடிலில் எந்தவிதமான பெரிய வசதிகளுமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள். இது எப்படி சாத்தியம். நானோ பட்டு மெத்தையில் படுத்தும் கூட எனக்கு உறக்கம் வரவில்லை. ஆனால் நீங்களோ கட்டாந்தரையில் படுத்து நன்றாக உறங்குகிறீர்கள். அது தான் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. அதை தான் உங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு போகலாமென்று நான் இங்கே வந்தேன்.ஆண்டியோ சிறு புன்முறுவலுடன் ராஜனை நோக்கினார். சரி சொல்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை இந்த மயில் தோகைக் கட்டினை நான் சொல்லும் வரை நீர் சுமந்து கொண்டிருக்க வேண்டும். நீர் இதை கீழே வைத்துவிட்டால் நீ தேடி வந்த விடையை என்னிடமிருந்து பெற முடியாது. ராஜா சற்றே யோசித்துவிட்டு, மயில் தோகைத் தானே இதிலென்ன பெரிய கஷ்டமிருக்கப் போகிறதென்று ஒப்புகொண்டான். ஆண்டியோ சொல்லிவிட்டு தன்னுடைய வேலைகளைப் பார்க்க தொடங்கி விட்டார். ராஜாவிற்கு முதலில் 2 நாழிகை எளிதாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல சற்றே கையில் வலியை உணர முடிந்தது. உச்சியும் வந்தது. ஆண்டியோ மதியம் சாப்பாட்டினை முடித்துவிட்டு ஒரு குட்டி தூக்கமும் போட்டுவிட்டு எழுந்தார். ராஜா சற்றே எரிச்சலுடன் ஐய்யா என்ன இது ஒரு ராஜாவை இப்படி தான் நீங்கள் நடத்துவதா? என்று வினா எழுப்பினார். நீங்கள் தேடிய விடைக் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் பொறுத்துதான் ஆக வேண்டும் என்றார் ஆண்டி. நேரம் செல்ல இருளும் படர ஆரம்பித்தது. ஆனால் ஆண்டியோ ராஜாவை கண்டுகொள்ளவேவில்லை. இரவு ஆகாரத்தையும் அருந்தி விட்டு ஆண்டியோ படுத்துக் கொண்டுவிட்டார். ராஜாவிற்கோ வலிப்பொறுக்க முடியாமல் கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது. உறங்க சென்ற ஆண்டியை ராஜா எழுப்பினார். ஐய்யா என்னை நாள் முழுவதும் மயில் தோகையை சுமக்க செய்து இந்த நாட்டின் ராஜாவை இழிவுப்படுத்திவிட்டான் இந்த ஆண்டி என்ற தீராப் பழியை உண்டுபண்ணுவது தான் உங்கள் மிக உயர்ந்த எண்ணமா? என்ற ஆத்திரத்தில் ராஜா கத்தினான். இப்போது ஆண்டி மெல்ல வாய் திறந்தார். 

பிறகு சொல்லலானார், ஏ ராஜாவே! நீ ராஜான், நீ நாட்டு மக்களைப் பற்றி அதிகம் யோசிக்கிறாய். மக்களை எப்படி காப்பது? எப்போது எந்த நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருவான், அவர்களிடமிருந்து எப்படி தம்மை தற்காத்து கொள்வது?. நாட்டின் கஜானா நிரம்பி வழிகிறது அதை எப்படி காப்பாற்றுவது? நாட்டில் களவு, கொலை இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி? நாட்டு மக்களுக்காக என்ன நல்ல திட்டங்கள் செய்யலாம்? என்று நாள்தோறும் கணந்தோறும் விடாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய். அவையெல்லாம் என் கடமைதானே என்று சொல்லலாம். அது உண்மையும் கூட. இந்த கடமைகள் எல்லாம் ராஜானாகிய உனக்கு மயில் தோகையைப் போன்றதே ஆகும். இந்த மயில் தோகையை தான் தினமும் நீர் சுமந்து கொண்டு உன்னுடைய மாட மாளிகையிலுள்ள பட்டு மெத்தைக்கு உறங்க செல்கிறாய். இத்தனைப் பாரங்களையும் சுமந்து கொண்டு படுக்க்க்கு செல்லும்போது உங்களுக்கு எங்கே தூக்கம்வரும். மாறாக வலிதான் கிட்டும்.


ஆனால் என்னுடைய குடிலைப் பாருங்கள். இதில் களவுப் போவதற்கானப் பொருள் எதுவுமே இல்லை. நான் உண்பது எல்லாம் இயற்கை எனக்கு அளித்த பழங்கள் தான். எனக்கு என்று சில ஆடைகள் மற்றும் இந்த போர்வை மட்டும் தான். நான் உறங்க செல்லும் போது இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிவிட்டு தான் படுக்க செல்லுகிறேன். இன்று நடந்த அத்தனை கருமங்களுக்கும் இறைவனிடத்தில் நன்றி தெரிவித்துவிட்டு தவறுகள் இருந்தால் மன்னிப்பும் கேட்டுவிட்டு தான் உறங்க செல்லுகிறேன். அதாவது மயில்தோகை என்னும் பாரத்தினை இறைவனின் பாதத்தில் இறக்கி வைத்துவிடுகிறேன். அதனால் தான் என்னால் எளிதாக உறங்க முடிகிறது. அது போல நீங்களும் உங்கள் மயில்தோகை எனும் பாரத்தினை இறைவனிடத்தில் இறக்கி வைத்துவிட்டு உறங்க செல்லுங்கள். வேண்டுமென்றால் மீண்டும் அதை காலையில் எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுக்கு உறக்கம் வரும்.

நேரம் செல்ல செல்ல இந்த மயில் தோகைக் கூட பாரமாகும் என்பது உங்களுக்கு புரிய வைக்கவே நான் உங்களை இந்த நாள் முழுவதும் அதனை சுமக்க செய்து உணரச் செய்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள் மன்னா! என்று ஆண்டி மன்னிப்பு கேட்டார். மன்னன் தன் ஞானக்கண்ணை திறந்த ஆண்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் பாரத்தை இறக்கி வைக்கும் வழியை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மீண்டும் அரண்மனை நோக்கி பயணிக்கலானான்.

ஜோதிடக் கருத்து

ஒரு ஜாதகத்தில் சயன சுகமென்பது 12மிடம். அந்த இடத்தின் அதிபன் பாபருடன் கூடினாலோ அல்லது பாவ கிரகத்தினால் பார்க்கப் பட்டாலோ நிச்சயம் அந்த ஜாதகருக்கு சரியான உறக்கமின்றி தவிப்பார். அதேசமயம் 12டமிடத்து அதிபர் தன் சொந்த வீட்டில் அமர்ந்து பாவ கிரகங்களின் சேர்க்கை இல்லாமிலிருந்தால் மிக நன்றாக உறங்க கூடியவராவர்.சில பேருக்கு படுத்ததும் உறக்கம் வந்துவிடும் இவர்கள் அந்த வகையை சேர்ந்தவராக இருப்பர்.12ல் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைவதும் சயன சுகத்தினை நன்றாக கொடுத்திடும்.

பூக்கள் மலரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.