கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 26 மே, 2011

நான் கண்ட ஜோதிடர்கள்-2


இந்த  மாதம் எனக்கு வேலைப் பளுக் காரணமாகவும், அலுவலகம் மாறிவிட்டக் காரணத்தாலும், என்னால் ஒரு பதிவிற்கு மேல் எழுத முடியவில்லை. இருந்தாலும் எழுத வேண்டும் ஆர்வத்தில் எந்த குறையும் இல்லை.

நான் கண்ட ஜோதிடர்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதவேண்டுமென்று எனக்கு ஆசைத்தான். ஆனால் இந்த பாழாய் போன நேரமின்மை……. இல்லை இல்லை ஏன் இந்த நேரமின்மை மேல் பழியை போடவேண்டும்? ….என்னுடைய திட்டமிடுதலில் ஏற்பட்டுள்ள குறையின் காரணமாக தான் சரியாக எழுதமுடியவில்லை. இருந்தாலும் ஜோதிடப் பூக்களின் நண்பர்களை, வாசகர்களை ஏமாற்றவும், இழக்கவும் எனக்கு மனமில்லை. முடிந்த அளவு சரியாக திட்டமிட்டு இனி எழுதுகிறேன். தொடர்ந்து பதிவுகளை எழுத முடியாமைக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ச்சி……..
சரி அந்த ஜோதிடரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், என் அம்மாவிடம் அடுத்த ஜோதிடரைக் காட்டும்மா, அங்கே போகலாம் என்றேன். அதற்கு என் அம்மா, நான் எந்த ஜோதிடர் வீட்டுக்கு போயும் ஜாதகத்தையெல்லாம் தூக்கிட்டு நின்னது இல்லடா..ஏதாவது நல்ல காரியம் பண்ணணும்னா மட்டும் தான் ஜோசியர்கிட்ட போய், நல்ல நாள் கேட்டு, குறிச்சிட்டு வரதோட சரி என்றார். சரி அம்மா, நாள் குறிச்சி கொடுத்த அந்த ஜோசியர் வீட்டுக்கே என்னையும் அழைச்சிட்டு போம்மா என்றேன்.
சரி வாடா, உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அங்கேயே போகலாம் வா, என்றார். நகரத்தில் உள்ள அந்த ஜோதிடர் வீட்டுக்கு போனோம். அந்த பழைய டவுனில் உள்ள அந்த வீடு, பழைமையை வெளிப்படுத்தியது. மிக குறுகலான சந்து தான் தெரு. இரண்டு வீடுகளுக்கு நடுவில் இடைவெளியேதும் இல்லாமல் வீடுகள் தொடர்ச்சியாக கட்டப்பட்டிருந்தன. இந்த நகரத்தில் பெரும்பாலான பழைய வீடுகள் எல்லாம் இப்படி வரிசையாக கட்டப்பட்டிருப்பதை எங்கு திரும்பினாலும் பார்க்கலாம்.
அவர் ஒரு பிராமணர். பெரும்பாலும் பிராமணர்கள் இந்த ஜோதிட தொழிலில் இருப்பதை நாம் பொதுவாக எங்கும் பார்க்கலாம். இவர் நான் இதற்கு முன்னாடி பார்த்த ஜோதிடர் போல் அல்லாமல், தெளிவானாவர். இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அந்த வீட்டின் மாடி மேல் ஏறி அங்கே காத்திருந்தவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டோம். அவர் பலன் சொல்றது வெளியில உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் நன்றாக கேட்கும் படி சொல்லிக் கொண்டிருந்தார். ஜோதிடம் கேட்க வருபவர்களின் ரகசியத்தை பத்தியெல்லாம் கவலைப்படுபவராக அவர் தெரியவில்லை. சகட்டுமேனிக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் உள்ளே ஜோதிடம் பார்த்துவிட்டு வருபவர்களை, வெளியில் உட்கார்ந்து இருப்பவர்கள், சற்று பரிதாபத்துடனோ அல்லது ஆச்சரியத்துடனோ பார்க்கும் நிகழ்வுகள் என் கண்களில் பட்டன,

என்னடா இது? நாம உள்ளே போயிட்டு வெளியில வரும்போது, நம்மளயும் மத்தவங்க இப்படி தான் பார்ப்பாங்களோ என்று ஒரு சின்ன நெருடலும் வந்தது.

சரி என்னோட முறை வந்தது. நானும் என் அம்மாவுடன் உள்ளே சென்றோம்.
வழக்கம் போல, என்னுடைய ஜாதகத்தை அம்மா, அந்த ஜோதிடரிடம் கொடுத்து, கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவர் எங்களை கொஞ்சம் பொறுங்கள், என்று சொல்லி விட்டு கணக்குப் போட ஆரம்பித்தார். திசாப் புத்தி கணக்குப் போட்டு விட்டு என்னுடைய ஜாதகத்தை தூக்கி மேசையின் மீது போட்டு விட்டு, நேரம் சுத்தமாக நல்லாயில்ல என்று சொன்னார். புதன் திசையில கேது புத்தி எது தொட்டாலும் துலங்காது என்று அழுத்தமாக சொன்னார்.
“நீ இப்ப என்ன பண்ற?” என்று அவர் கேட்டார்.
நான் இப்ப ஒரு தனியார் கம்பெனியல வேலையில இருக்கேன்” என்று நான் சொன்னேன்.
என்ன சம்பளம்? என்று அவர் கேட்டார்,
எனக்கு மாதம் 4000ரூபாய் என்றேன் நான்.
ஐய்யா, “நான் இந்த வேலையை விட்டுவிடலாம்” என்று முடிவு செய்திருக்கிறேன். “புதிதாக ஏதாவது தொழில் தொடங்கலாம்” என்று உத்தேசித்து உள்ளேன், என்று சொன்னேன்.
“நான் சொல்லிட்டேன் இல்ல.. உனக்கு நேரம் சுத்தமா நல்லாயில்ல. நீ இப்ப இந்த வேலையை விட்டு விட்டா உனக்கு அடுத்த வேலை கிடைக்காது. நீ இப்ப தொழில் தொடங்கினா.. அது சுத்தாமா நஷ்டமாயிடும். நீ இப்ப எது தொட்டாலும் துலங்காது” என்று தொடர்ந்து எதிர்மறையான பலன்களை மூஞ்சியில அடிச்சார் போல சொல்லி முடிச்சார்.
அதை கேட்டு, அப்படியே என் அம்மா இடிஞ்சிபோயிட்டாங்க.
“என்ன, ஐய்யா இவ்வளவு மோசமான பலனை சொல்லீறீங்களே! என்ன பன்ன?” என்று என் அம்மா கேட்க,
அதான் சொல்லிட்டேனாமா, நீ ஒன்னும் செய்ய முடியாது.” என்று சொன்னார் அவர்.
அடுத்து அம்மா, “கல்யாணம்” அப்படின்னு, சொன்னதும்...
“இன்னும் பதினொறு மாசத்துக்கு, நீ ஒன்னும் பண்ண முடியாதும்மா” என்றார் அவர்.
இந்த பலனை எல்லாம் நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்தேன். சரி, அவரிடம் வேறு ஒன்னும் கேட்காமல் அடுத்து என்ன செய்யலாம்?, என்று யோசனையுடனே அவருக்கு கொடுக்க வேண்டிய 50ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியேறினோம்.

“போன ஜோசியர் என்னான்னா, நீ இப்ப தொழில் பண்ணாலாம்ன்னு” சொன்னாரு, “இவரு என்னான்னா நீ எது தொடங்குனாலும் இப்ப விளங்கவே விளங்காதுன்னு” சொல்றாரு எது தான் சரி. இப்ப எதை நம்புறதுன்னு தெரியல? என்னத்தை செய்றதுன்னும் தெரியல? என்று குழம்பினேன்.

ஜாதகத்தில நெகடிவ் பலன்கள் வரத்தான் செய்யும், அதுக்காக இப்படியா மூஞ்சியல அடிச்ச மாதிரி சொல்லி என்னுடைய ஒட்டு மொத்த தன்னம்பிக்கையையும் இப்படியா சாகடிக்கறது.

“ஏன்டா... இந்த ஜோதிடரை போயி பார்த்தோம்?” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், அம்மாவிடம் இப்ப என்னம்மா பண்றது? ஒரே குழப்பமாகவே ஆயிடிச்சுன்னு நொந்து போயி கேட்டேன்.

பூக்கள் மலரும்…..

புதன், 11 மே, 2011

அடுத்த 'கோ' யாரு?


"தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும்?" என்று அரசியல் வட்டாரத்தில் ஒரே பரபரப்பும், குழப்பங்கள் நீடித்துக் கொண்டு தானிருக்கின்றன. ஊடகங்களும் "எக்ஸிட் போல்" கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலே இரண்டு 'திமுக' விற்கு ஆதாரவகாவும், மற்ற ரெண்டு கணிப்புகள் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வந்துள்ளன. "எதுதான் சரி" என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. போதாக் குறைக்கு 'நக்கீரன்' தன் திமுக ஆதரவை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறது. மக்களாலும் ஒரு தெளிவான நிலைக்கு வர இயலவில்லை.

என்னதான் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தாலும், ஊழல் குற்றசாட்டுக்கள் இருந்தாலும் கூட திமுகவின் செல்வாக்கு குறைந்தபாடில்லை என்றே தான் சொல்ல வேண்டும்.

சரி நம்ம "ஜோதிடம்" என்ன தான் சொல்லுதுன்னு பார்ப்போம். எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு 'திரு. கருணாநிதி' மற்றும் 'செல்வி. ஜெயலலிதா' ஜாதகங்களை கணித்து பார்க்கும் போது, நடந்து முடிந்த குருப் பெயர்ச்சியினைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழக்த்தில் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயமான ஒன்றாக தான் தெரிகிறது.

ஜெயலலிதா அவர்கள் குரு எட்டிலிருக்கும் போது தேர்தலை எதிர்கொண்டார். ஆனால் இப்போது குரு பெயர்ச்சியாகி ஒன்பதாமிடத்திற்கு வந்து விட்டார்.

அதே போல கருணாநிதி அவர்களும், குரு 11லிருக்கும் போது தேர்தலை எதிர்கொண்டார், இப்போது குரு பெயர்ச்சியாகி 12மிடத்திற்கு வந்துவிட்டார்.

இதை ஜோதிடத்தில் "transition period" என்று சொல்வார்கள். அதாவது "கிரகங்கள் மாறும் காலங்கள்" என்பர். பொதுவாகவே இந்த மாதிரி காலகட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜனன ஜாதகம் மற்றும் பலன்களை கணிப்பது என்பது சற்றே சிரமமான மற்றும் சவாலான ஒன்றாகும். சந்தி அமைப்புடைய ஜாதகங்களை கணிப்பது என்பதும் ஜோதிடர்களுக்கு ஒரு மிகப் பெரிய சவாலகும்.

இப்போது 'கிரகங்கள் மாறும் காலம்' என்பதால், தான் ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை மாறி மாறி வெளியிடுகின்றன. எப்போதுமே 'குருப் பெயர்ச்சி' மனிதர்களை நேரடியாக பாதிக்கும். அதாவது குரு தான் இருக்கும் இடம் மற்றும் பார்வையைப் பொறுத்தே பலன்களை தருவார். அவர் நேர்மை கிரகம் என்பதால் தக்க பலனை வழங்குவார். அதே சமயம் இரக்க குணமுடையவர்.



சரி நம்ம 'குரு' அடுத்து யாரை 'கோ' (அதாங்க முதலமைச்சர்) வாக்க போகிறார் என்று பார்க்கலாம்.

ஜெயலலிதா அவர்களுக்கு தற்போது 'குரு பலம்' உள்ளது. ராசிக்கு 9லிலும் லக்னதிற்கு 11லிலும் குரு அமர்ந்து மிகப் பலமாகவே உள்ளார். எனவே 'தேர்தல் முடிவுகள்' இவருக்கு சாதகமாக வந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாலான சாத்தியக் கூறுகள் உள்ளன. இவருக்கு 'குரு திசை' ஆரம்பித்திருக்கிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு 'குரு திசை' யோகமான திசையாகும். பொதுவாக ஒவ்வொரு 'திசை' மாறும் போதும் மனிதரின் 'புத்தி மற்றும் குணாதிசயங்கள்' எல்லாம் நிச்சயம் மாறும். எனவே நிச்சயம் இனி பழைய ஜெயலலிதாவினை பார்க்க முடியாது. குரு 'நேர்மைக் கிரகம்' என்பதால் தெய்வ பலமும், தொண்டுள்ளமும் கொண்ட ஜெயலலிதாவினை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டிய நாட்கள் வந்துவிட்டன.

கருணாநிதி அவர்களுக்கு தற்போது 'குரு பலம்' சுத்தாமாக இல்லை என்றே தான் சொல்ல வேண்டும். ராசிக்கு 12லிலும் லக்னத்திற்கு 10மிடத்திலும் குரு அமர்ந்திருப்பதால் நிச்சயமாக பதவி பறிபோவது உறுதி. எவ்வளவு கடினாமாக முயன்றாலும் இந்த முறை ஆட்சியமைக்க முடியாது. குறிப்பாக இவருக்கு தற்போது 'சுக்கிர திசை' நடந்து வருகிறது. இவருக்கு மட்டுமல்ல கட்சிக்கும் 'சுக்கிர திசை' தான் நடந்து வருகிறது. ராசிநாதனின் திசை வருவதென்பது யோகமான ஒன்றாகும். அதனால் தான் கடந்த பத்தாண்டுகளில் இவரது வளர்ச்சி 'அசுர' வேகத்தையடைந்தது. இன்னும் பத்தாண்டுகள் உள்ளன. இந்த திசையே இவருக்கு 'மாரகத்தையும்' தரக் கூடியது என்பதால் இவருக்கு இநத திசையிலேயே மரணமும் தழுவக்கூடும். இந்த ஓராண்டுகள் முழுவதும் பல சிக்கல்கள் காத்திருக்கிறது இவருக்கு என்பது மட்டும் திண்ணம்.

எவ்வளவு தான் கணிக்கும் 'சக்தி' இருந்தாலும், "அடுத்த விநாடியின் ஆச்சரியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு சமானியன் தான் நான்".

யார் வெற்றிப் பெற்றால் என்ன நாம் எல்லாம் வேண்டுவது ஊழலற்ற நல்லாட்சி. அதை யார் தான் கொடுப்பார்களோ??? தெரியவில்லை.

இந்த பதிவினை எழுதலாமா வேண்டாமா என்று யோசித்து பின்னர் எழுதினேன். தேவையில்லாமல் என் மீது நானே அரசியல் சாயம் பூசிக் கொள்ள விரும்பாததேக் காரணம் ஆகும்.