கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 23 பிப்ரவரி, 2011

ஜாதகம் பார்க்காதீங்க!


என்னங்க ஜோதிடப் பூக்கள் வலைப் பதிவில் ஜாதகம் பார்க்காதீங்கன்னு எதிர் மறையான பதிவு வருகிறதேன்னு நினைக்கீறங்க அதானே. ஆமாங்க ஜாதகம் பார்க்காதீங்கன்னு தான் சொல்றேன் யாருக்குன்னா காதலர்களுக்கு மட்டும் தான். இன்றைக்கு பெரும்பாலும் காதல் வராதாவர்களே இருக்க் முடியாது. காதல் வரும் வயதைப் பொறுத்து அவர்களின் காதல் வலிமை இருக்கும் என்று சொல்லலாம்.


பள்ளிப் பருவத்தில் வரும் காதல்கள் பெரும்பாலும் திருமணம் வரை வருவதில்லை என்பது எதார்த்தமான ஒரு விஷயம்.  ஏனெனில் பள்ளிப் பருவத்தில் வரும் காதலில் எதிர்கால வாழ்கை மற்றும் சமூகம் பற்றிய தெளிவான அறிவும் சிந்தனைகளும் இல்லாததாலேயே அவைகள் தொடருவதில்லை. ஆனால் அவைகள் வாழ்க்கையில் என்றும் நீங்கா பசுமையானவையே ஆகும்.

பள்ளி பருவத்திலே காதலித்தவர்கள் பெரும்பாலானவர்கள் அடுத்த பருவமான கல்லூரிக்கு செல்லும் போதே அடுத்த காதலும் துவங்கி விடுகிறது. ஒரு சிலருக்கு தான் பள்ளிப் பருவக் காதல் கல்லூரி பருவத்திலும் தொடருகின்றன. அவர்கள் அதிர்ஷ்டசாலிகளா அல்லது துரதிரஷ்டசாலிகளா என்பதை உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன். இந்த கல்லூரிப் பருவத்தில் வரும் காதல் ஓரளவிற்கு தெளிவும், சமூகப் புரிதலும் இருப்பதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் காதலில் வெற்றிப் பெற்று திருமணம் வரை செல்லுகின்றனர். அவர்களின் வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கின்றன. சிலருக்கு திருமண வாழ்க்கை தோல்வியடைந்தும் விடுகின்றன.

இன்னும் ஒரு சாரருக்கு கல்லூரிப் பருவத்தை தாண்டி வேலைக்கு சென்ற பின்னர் தான் காதலேப் பிறக்கும். இருவரும் வேலைச் சென்றுக் கொண்டிருப்பவராயின் சமூகத்தில் தங்களுக்கென்று உள்ள இடம் மற்றும் வாழ்க்கைப் பற்றிய தெளிவான அறிவு பக்குவத்தால் அவர்களும் காதலில் வெற்றிப் பெற்று திருமணப் பந்தத்தில் இணைகின்றனர். இந்த திருமணங்களிலும் வெற்றி தோல்வி இரண்டுமே உண்டு.

சரி இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு. ஏன் காதலர்கள் ஜாதகம் பார்க்காதீங்கன்னு சொல்றீங்க அதை சொல்லுங்க அதானே.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு காதல் முறிந்து போவதற்கு ஆண், பெண் இருவருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், கெட்டப் பழக்கங்கள், பணம், சாதி, மதம், அந்தஸ்து, மற்றும் சமூகம் இந்த மாதிரி ஏகப்பட்ட காரணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்றைய காலக்கட்டங்களில் காதலர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன், அவர்களின் காதலைப் பெற்றோர்களிடம் சொன்னால் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அப்படியே சம்மதிக்கலாம் என்ற முடிவிற்கு பெற்றோர்கள் வந்தால் உடனே ஜாதகம் பார்ப்போம், பொருத்தம் பார்ப்போம் சொல்லுவாங்க...எல்லாம் சரியாக வருமென்றால் கல்யாணம் பற்றி பேசலாம். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக வேற ஒருத்தரைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நிபந்தனையும், நிர்ப்பந்தமும் வருகிறது. அந்த மாதிரி காதலர்களின் பெற்றோர்கள் ஜாதகம் பார்த்த பிறகு நின்றுப் போனக் கல்யாணங்கள் பல உண்டு.

இப்ப கொஞ்சம் மாடர்ன் டிரெண்டு இல்லையா அதான் காதலர்களே அவங்க ஜாதகங்களை கையிலெடுத்துக்கிட்டு நம்ம கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்று கேட்டு ஜோதிடர்களை அணுகிறது சாதரண விஷயமாகிவிட்டது. ஒரு கல்லூரி படிக்கிற பொண்ணு அவளோடு படிக்கின்ற இரண்டு மூன்று ஆண் நண்பர்களுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு வந்து இதுல "இவங்க மூணு பேரையுமே எனக்கு பிடிக்கும். இருந்தாலும் இவன் தான் என்னை ரொம்ப காதலிக்கிறதா சொல்றான், இதுல யார் பெஸ்ட்ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க" அப்படின்னு எல்லாம் ஜோதிடரிடம் கேட்கிறாங்க.  ஒரு சில பெண்கள் இப்ப காதலிக்கிறதிற்கு முன்பே பையன் என்ன ஜாதி, என்ன ஸ்டேடஸ் நம்ம அப்பா அம்மா ஒத்துகுவாங்களா என்றெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறாங்க. பசங்க மட்டும்  சளைத்தவர்களா என்ன அவங்களும் இந்த மாதிரியெல்லாம் ஜாதகங்களை தூக்கிட்டு திரியறதும் நடந்துகிட்டு தான் இருக்கு. அவங்க இன்னும் ஒரு படி மேல போயி எந்த நாள் நட்சத்திரத்தில காதலை சொன்னால் காதல் கைகூடும்ன்னு கேட்கிற அளவிற்கு தான் இருக்காங்க.

காதல்னாலே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் முழு நம்பிக்கை வருவது தானே. அதாவது இரு மனங்களின் சங்கமம் தானே காதல். இப்படி இரண்டு, மூன்று வருடங்கள் மனமொத்து காதலித்தப் பிறகு இரண்டு பேருக்கும் பொறுத்தம் இருக்கான்னு பார்க்கலாம்னு ஜோதிடர் கிட்ட போக அந்த ஜோதிடரும் இடக்கு மடக்கா சொல்லப் போக அதைக் கேட்ட இரண்டு பேருக்கும் இவ நமக்கு சரியா வரமாட்டாள் (அ) இவன் நமக்கு சரியா வரமாட்டான் போல என இரண்டு பேரின் மனசுக்குள்ளும் ஒரு மெல்லிய சிந்தனை இழையோட ஆரம்பிக்கும். பிறகு போக போக அந்த மெல்லிய சிந்தனை வலுவடைந்து சந்தேகமாய் மாற போகப் போகக் கருத்து வேறுபாடு உண்டாகி மெல்ல காதல் விரிசல் அடைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் காதல் உடைந்தே போய்விடும். இப்படி அவங்களோட பல வருடக் காதல் அவங்க ஜோதிடரை சந்தித்த அந்த 15 நிமிஷ நேரத்தாலேயே தீர்மானிக்கப் பட்டு உடைந்து விடுகிறது.

ஒருவரை காதலிப்பதற்கு முன்பே எத்தனை தடவை வேண்டுமென்றாலும் யோசிக்கலாம் எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் நம்பி காதலித்த பிறகு ஜோதிடர்களை தேடிச் சென்றால் நிச்சயமாக உங்கள் காதல் திருமணத்தில் முடியாது என்று தான் நான் சொல்வேன். ஏனென்றால் ஜோதிடர்களிடம் பலன் கேட்டல் என்பது மனோரீதியான பாதிப்புகளை உண்டு பண்ணும். ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்கும் போது அந்த ஜோதிடர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் நேரடியாக பலன் கேட்பவரின் மனதில் மிக ஆழமாக பதிய வைக்கும் சக்தியுடையது தான் இந்த ஜோதிடம். இதில் எதிர் மறையான பலன்கள் சொல்லப்படும் போது அந்த பலன்களை உள்வாங்கி அதனை தாங்கும் சக்தி பெரும்பாலான சாமனிய மக்களிடம் இருப்பதில்லை. இதனால் எவ்வளவு ஆழமாக காதலித்தவர்களும் கூட ஜோதிடரிடம் சென்று வந்த பிறகு அவர்கள் தங்கள் காதலை அணுகும் முறையில் மாற தொடங்கி விடுகின்றனர்.

காதல் கோட்டை திரைப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

"ஜாதி இல்லை பேதம் இல்லை
ஆதாம் ஏவால் தப்பும் இல்லை - காதல்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது
காசு பணம் கேட்பதில்லையே"

இப்படி எதுவும் பார்க்காமல் வந்தால் தாங்க அது காதல். ஆனால் அந்த காதல் வந்தபிறகு எல்லாத்தையும் பார்த்து அதற்காக உயிருக்கு உயிரா காதலிச்சவங்களை விட்டு காதலை துறந்து வேறுஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன சுகம்ங்க கிடைக்கும்.

எப்படி காதல்னு வந்துட்டா ஜாதி, மதம், பணம் இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு நாம நினைக்கிறமோ அதே மாதிரி இந்த ஜாதகத்தையும் பார்க்காதீங்க.

10 பொருத்தம் இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லையென்றால் கல்யாணம் கட்ட கூடாது, அதேபோல 10 பொருத்தம் இல்லாவிட்டாலும் மனப் பொருத்தம் இருந்தால் மணமுடிக்கலாம் என்றுதான் ஜோதிடம் சொல்கிறது. மனப் பொருத்ததிற்கு என்றுமே ஜோதிடம் தடையாக இருந்ததில்லை. அப்படியிருக்க காதலர்கள் மட்டும் ஜோதிடம் பார்த்து தங்கள் மனப் பொருத்ததை உடைத்து மண வாழ்வினை துறந்துவிடக் கூடாதென்பதற்காக தான் இந்த பதிவு

இப்ப சொல்லுங்க ஜோதிடப் பூக்களில் இந்த எதிர் மறையான தலைப்பு சரிதானே.

படம்: நன்றி கோலி டாக்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

குழலி !!!



மணியடித்ததும் குழலி அவசர அவசரமாக தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை தன் தோள் பையில் முழுவதும் உள்ளே சொருக முடியாமல் பாதியிலேயே வைத்துவிட்டு தன் பேனா, பென்சில், ஸ்கேல் ஆகியவைகளை கைகளில் வாரிக் கொண்டு தன் தேர்வு நுழைவு சீட்டினை தேடி கைகளில் எடுத்துக் கொண்டு தேர்வு அறைக்குள்ளே சென்றாள்.

தன் தேர்வு எண் எழுதப்பட்ட இருக்கையைக் கண்டுபிடித்து சற்றே படப்படப்புடன் அமர்ந்தாள். தான் கடைசியாக படித்த பாடங்களை சற்றே நினைவுப் படுத்தி கொண்டிருந்தாள். தேர்வு அறைக்குள் நுழைந்த கண்காணிப்பாளர் எல்லோருக்கும் விடைத் தாளினை அளித்துக் கொண்டிருந்தார். குழலி தன் விடைத் தாளினைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய விவரங்களை முதல் பக்கத்தில் எழுதி முடித்துவிட்டு கேள்வித் தாளுக்காக காத்திருந்தாள்.

மணியடித்ததும் கேள்வித் தாள் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டது. கேள்வித் தாளிளை அவரசமாக திருப்பிப் பார்த்துவிட்டு தனக்கு தெரிந்த எல்லாக் கேள்விகளும் வந்திருப்பதைப் பார்தது நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். தனக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு முதலில் மிக ஆர்வமாக விடைகளை வேகமாக அழகாகவும் எழுத தொடங்கினாள்.

தங்கு தடையின்றி படித்த எல்லாப் பாடங்களும் அவளுக்கு நினைவில் வர தன்னை அறியாமலே முக்கால் மணி நேரத்திற்குள் நான்கு பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு விடையெழுதி முடித்துவிட்டிருந்தாள். அடுத்த ஒரு கேள்விக்கு பதில் சரியாக ஞாபகம் வராததால் அடுத்து இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை எழுத ஆரம்பித்தாள்.

அப்போது இரண்டு கண்கள் அவளை உற்று நோக்குவது போல் அவள் உணரலானாள். யார் அது பக்கத்து இருக்கை கயல்விழியாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் அவளை திரும்பிப் பார்க்கிறாள். ஆனால் கயல்விழியோ மிகவும் சிரத்தையுடன் பதில்களை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தாள் குழலி. பிறகு யார் என்னைப் பார்த்தது என்று சற்றே குழப்பத்துடன் மீண்டும் எழுத தொடங்கினாள். தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கடந்துவிட்டிருந்தது.

மீண்டும் அதே திசையில் தன்னை யாரோப் பார்ப்பது போல் உணர்ந்தாள். அவளுக்கு ஏதோ போல உறுத்தியது. உடனே சற்றே திரும்பி வலப்பக்கம் பார்த்தாள். ஆம் ஜன்னலின் வழியாக அவளை இரண்டு கண்கள் வைத்த கண் எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தது. யாரென சட்டென்று உணர்ந்துகொண்டாள். இருந்தாலும் தான் தேர்வு எழுதி முடிக்க வேண்டுமென்ற சிரத்தை அதிகமாக இருந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமல் தேர்வினை முன்பை விட இன்னும் வேகமாக எழுதிவிட வேண்டுமென்று இன்னும் தன் எழுதும் வேகத்தினை அதிகரித்தாள்.

அடுத்த ஒரு மணி நேரமும் அந்த பக்கம் அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே விடைகளையும் வேகமாக எழுதி முடித்தாள். அடுத்த அரைமணி நேரம் எல்லா விடைகளை சரிபார்ப்பது மற்றும் தலைப்புகளுக்கு அடிகோடிவது மற்றும் நிறமிடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு தான் எழுதிய விடைகளையும் சரிபார்த்து முடித்துவிட்டு நன்றாக தேர்வெழுதிய நிம்மதியுடன் மீண்டும் ஜன்னலைப் பார்த்தாள் அந்த கண்கள் அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. அவள் தேர்வெழுதும் அழகினை முழுவதுமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

சற்றே மகிழ்ச்சியுடனும் ஆச்சரியமுடனும் தன் விடைத்தாளினை ஆசிரியரிடம் அளித்து விட்டு நேராக அந்த ஜன்னலில் நின்றுக் கொண்டிருந்த முகுந்தனின் கையைப் பிடித்து பள்ளி திடலை நோக்கி அழைத்து சென்றாள். அந்த பள்ளி திடலில் ஏராளமான மரங்கள் இடைவெளி விட்டு நன்றாக வளர்ந்திருந்தன. மிக அழகாக பூத்து குலுங்கும் சிவப்பு நிற மலர்கள் அந்த பள்ளி வளாகத்தையே ரம்மியமாக வைத்திருந்தது. அந்த திடலே ஒரு சிவப்பு வனம் போல அழகாக இருந்தது. உச்சி வெயிலாக இருந்தாலும் இங்குள்ள மரங்களால் நிழலும் குளுமையும் இயற்கையாகவே அமைந்திருந்தது.

அந்த குலுமையில் அவள் கைப்பட்டதும் மேலும் குளுமை அடைந்திருந்தான் முகுந்தன். அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் கண்களில் காதல் ரசத்தினை தவிர வேறு எதுவும் அவளுக்கு தெரியவில்லை.  முகுந்தனோ கண்களை எடுப்பதாயில்லை.

என்ன முகுந்தா! என்னை விழுங்காமல் விடமாட்டாய் போலும் என்றாள். சரி இப்போதாவது சொல் எதற்காக நான் தேர்வு எழுதும் அறைக்கு வந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்.

குழலி உனக்கு தெரியாதா என்ன? நான் உன்னை காதலிப்பது.

ஆமாம் நீ என்னை காதலிக்கிறாய். அதற்காக நாளை பரிட்சைக்கு கூட படிக்காமல் எதற்காக இங்கே வந்து கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள் குழலி.

நான் படித்துக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் எனக்கு நினைவு முழுவதும் உன்னை பற்றியே இருந்ததால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் உன்னை வந்து பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த பிறகு எனக்கு போக மனமில்லாமல் இங்கேயே நின்று விட்டேன் என்றான் முகுந்தன்.

அப்படியா! சரி வா, இங்கே உட்கார்ந்து பேசலாமென்றாள். இருவரும் அந்த மரத்தினடியிலமர்ந்தனர். முகுந்தன் அவள் கைகளை விடுவதாயில்லை. அவளும் ஆசையோடு அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். பிறகு சொல்லலானாள். முகுந்தா,  நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் என்றாள். குழலி! நீ பேசினாளே போதும், என்ன வேண்டுமென்றாலும் சொல், நான் கேட்கிறேன் என்றான்.

வெட்கத்துடன், சரி முகுந்தா இப்போது சொல்வதைக் கேள் என்று கதையை சொல்ல தொடங்கினாள் குழலி.

சுந்தரன் என்னும் ராஜா தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் நன்றாக ஆட்சி புரிந்து வந்தான். அவனது பட்டத்து அரசியாக அமிர்தவள்ளி என்பவள் அவனது அரண்மனையை அலங்கரித்தாள். சுந்தரனும் அமிர்தவள்ளியும் இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக காதலித்து பின்னர் இருவரும்  திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அவர்களின் காதலில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் இருவரும் தங்கள் காதலினை மேலும் வளர்த்து வந்தனர். ராஜா சுந்தரன் வீரத்திலும், அழகிலும் குறைவில்லாதவன். அதுபோல அமிர்தவள்ளி மிகவும் அழகானவள். அறிவிலும் சிறந்தவள். அவளை அரசியாக கொண்டதால் சுந்தரனும் பெருமையடைந்திருந்தான். சுந்தரன் அமிர்தவள்ளியின் அழகிலே மயங்காத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சுந்தரன் தன் மனைவியின் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தான்.

இப்படி மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. ஆம், எதிரி நாட்டு அரசன் மதுசூதன் சுந்தரன் மீது படையெடுத்து வருவதை அறிந்தான். உடனே தன் அமைச்சர் நகுலனை அழைத்து ஆலோசனை செய்தான் சுந்தரன். எதிரி நாட்டு அரசன் மதுசூதனை எப்படி தடுத்து விரட்டியடிப்பது என்று நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பிறகு அமைச்சரின் ஆலோசனைப் படி மதுசூதனை நமது நாட்டின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதென முடிவு செய்தான் சுந்தரன். உடனடியாக தளபதி வேங்கைய்யனை அழைத்து படைகளை திரட்டி கொண்டு எல்லையில் அரண் அமைக்க உத்தரவிட்டான்.

தளபதியும் தன் படைபரிவாரங்களுடன் எல்லையில் இரவோடு இரவாக கூடாரங்களை அமைத்து போர் வியூகங்களை வகுக்கலானான். எதிரி நாட்டு மதுசூதனின் படைகள் மன்னர் சுந்தரனின் படைகளுக்கு சம பலம் பொருந்தியதே. எனவே முதலில் எந்த படையை கொண்டு தாக்கினால் வருபவர்களின் பலத்தை உடனடியாக இழக்க செய்யலாம் என்று திட்டமிட்டான் தளபதி. அவன் சரியான திட்டமிடுதலோடு அரசரும் போர்களத்தில் இறங்கினால் நம்மால் எளிதில் மதுசூதனை சரியாக 10 நாட்களில் வீழ்த்திவிட முடியுமென்று நம்பினான். உடனே அரசருக்கும் தன்  திட்டத்தினை தெரிவித்தான் தளபதி வேங்கைய்யன். அரசரும் தளபதியும் திட்டத்தை ஏற்றுக் கொண்டு போர் களத்தில் தானும் சண்டையிட விருப்பம் தெரிவித்தான் சுந்தரன்.

அதன்படி அடுத்த நாள் விடியல் தாண்டி உச்சி நெருங்கும் வேளையில் மதுசூதனின் படைகள் எல்லையை நெருங்கி விட்டன. தளபதியின் திட்டத்தின் படி நெருங்கிய மதுசூதனின் படைகளை சுந்தரன் படைகள் முதலில் யானை படையை கொண்டு தாக்கியது. முதலிலேயே யானை படையால் தாக்கப்பட்டதால் மதுசூதனின் படைகள் நிலை குலைய ஆரம்பித்தது. அந்தி வரையிலானா தாக்குதலில் சுந்தரன் படைகளுக்கே வெற்றிக் கிட்டியிருந்தது. முதலாவது நாள் போரின் முடிவில் அன்று மாலை கூடாரத்தில் சுந்தரன் தன் தளபதி வேங்கைய்யனின் திறமையை வெகுவாக புகழ்ந்தான்.  இரவும் வந்தது. வீரர்கள் அனைவரும் தம் காயங்களுக்கு மருந்திடுவது, உணவருந்துவது என்றும் உறங்க செல்வதுமென்றுமிருந்தனர். இன்று அரசன் போர் களத்தில் சண்டையிடவில்லை.

காரிருளும், குளிர்ந்த நிலவும் சுந்தரனுக்கு அமிர்தவள்ளியை ஞாபகமூட்டின. தன் மனைவியை நினைத்து உருகலானான் சுந்தரன். திருமணம் ஆன இந்த நாள் வரை அமிர்தவள்ளியை ஒரு இரவு கூட பிரிந்த இருந்தததே இல்லை என்பதை சுந்தரன் நினைத்து பார்த்தான். இந்த இரவு அமிர்தவள்ளியில்லாமல் இவ்வளவு மோசமாக இருக்கிறதேயேன்று தன்னை தானா நொந்து கொண்டான். இருந்தாலும் இந்த பிரிவினை அமிர்தவள்ளிக்கு உடனே தெரிவிக்க எண்ணினான். ஆனால் எல்லா வீரர்களும் உறங்க சென்றதால் நாளை தெரிவித்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் சுந்தரன்.

அடுத்த நாள் வேறொரு வியூகத்தோடு தளபதி வேங்கைய்யன் மதுசூதனின் படைகளை மீண்டும் திணறடித்தான். சுந்தரனோ அமிர்வள்ளிக்கு தன் காதலை மடலாக வடித்து செய்தி அனுப்பினான். இந்த நாளின் முடிவிலும் மதுசூதனின் படைகளுக்கு பெரும் பின்னடைவாக தான் இருந்தது. இன்றும் சுந்தரன் போரிலே பங்கேற்வில்லை. தளபதி வேங்கைய்யன் இருக்கும் வரை நான் கவலைப் படத் தேவையில்லை என்று மகிழ்வோடு தளபதியை புகழ்ந்தான் சுந்தரன். அன்று இரவே அமிர்தவள்ளியிடமிருந்து சுந்தரனக்கு செய்தி வந்தது. "இது தற்காலிக பிரிவு தான்! அன்பே கலங்காதிரு போரில் வெற்றிப் பெற்று வாங்கள்!" என்று கூறியிருந்தாள்.

ஆனால் சுந்தரனுக்கோ மனசு கேட்கவில்லை. மீண்டும் அமிர்தவள்ளியை நினைத்துக் கொண்டு உருகலானான். மீண்டும் தன் நினைவெல்லாம் நீயே இருக்கின்றாய் என்றும் உன்னைப் பார்க்க வேண்டுமென்றும் மடல் அனுப்பினான். மூன்றாவது நாள் யுத்தம் ஆரம்பித்தவுடன், மதுசூதனின் படைகள் சற்றும் எதிர்பாராத விதமாக புது வியூகத்துடன் மிக மூர்க்கத்தனமாக பல குழுக்களாகப் பிரிந்து தாக்கினர். இன்று தளபதி வேங்கைய்யனின் கணக்கு தவறானது. எனவே சுந்ரதரனின் படைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. சுதாரிப்பதற்குள் சுந்தரனின் படைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஆனது. இருந்தாலும் சுந்தரனின் படைகள் மதுசூதனின் படைகளை ஓரளவு சாமாளித்தே விட்டது. அன்று அந்தியில் சுந்தரனின் படைகள் பின்னடைவுடன்  கூடாரத்திற்கு திரும்பியது.

இன்று சுந்தரன் சற்றே வாட்டத்துடன் காணப்பட்டான். மேலும் இன்று போரில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவினையும் அதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்குமாறு தளபதிக்கு உத்தரவிட்டான். ம்துசூதனின் படைகள் இன்று போர் தந்திரத்தை மாற்றி போரிட்டதும் அதை சுதாரிப்பதற்குள் நம் படைகளுக்கு பெருத்த அடி விழுந்ததும் தான் காரணமென்றான் தளபதி. ஆனால் இந்த உரையாடலில் அவ்வளவாக விருப்பம் காட்டிக் கொள்ளாமல் சுந்தரன், சரி நாளை நன்றாகப் போரிடுங்கள் என்று கூறி விட்டு சென்றான்.

அதே நேரத்தில் போர்க் களங்களில் நடப்பதை அவ்வப்போது அறிந்து கொண்டே இருந்தாள் அமிர்தவள்ளி. அவளுக்கு இன்று அரசரின் ஈடுபாடற்ற செயல்பாடுகளும் தெரிவிக்கப்பட்டன. அவளுக்கு சற்றே அதிர்ச்சியளித்தது. காரணம் நாட்டுக்கே ராஜா இப்படி போர்க்களத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பது ஏன் என்று சிந்திக்கலானாள். சிந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அரசரிடமிருந்து மீண்டும் மடல் வந்தது. அதிலே மீண்டும் சுந்தரன் தன் என் ஞாபகமாகவே இருப்பதை அறிந்து கொண்டாள் அமிர்தவள்ளி. அரசரின் இந்த நிலைமை போர்க் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தன்னம்பிக்கை இழக்க செய்து விடும் என்பதை உணரலானாள். எனவே அரசரை தன்னம்பிக்கை அடைய செய்யும் பொருட்டு அரசருக்கு அவள் பதில் மடல் ஒன்றை அனுப்பினாள். "நாட்டின் ராஜா நீங்களே இப்படி இருந்தால் நாட்டையும், நாட்டு மக்களையும், உங்களையே நம்பிக் கொண்டிருக்கும் என்னையும் யார் காப்பாற்றுவது, எனவே கடமையுணர்ந்து போர்புரியுங்கள்" என்று உணர்த்தினாள்.

மறுநாள் யுத்தம் ஆரம்பித்ததும் தளபதி வேங்கைய்யனை முற்றுகையிடும் வியூகத்தினை மதுசூதனின் படைகள் வெற்றிக் கரமாக செயல்படுத்தினர். தளபதியும் தன் முழு வீரத்தையும் காட்டி போர் புரிந்தான். மதுசூதனின் படைகளை முடிந்த அளவு துவம்சம் செய்தான். இறுதியில் மதுசூதன் தன் தந்திரத்தால் நொடிப் பொழுதில் தளபதி வேங்கைய்யனின் தலையை துண்டாக்கி விட்டான்.  தளபதியை கொன்றதோடு மேலும் சுந்தரனின் படைகளை பந்தாடியது மதுசூதனின் படைகள். தளபதி இறந்த செய்தியைக் கேட்டு சுந்தரனே போரில் குதித்தான். போரில் இறங்கி மதுசூதனின் படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து சமாளித்தான். தளபதியை இழந்த பெருத்த இழப்போடு சுந்தரனின் படைகள் அன்று மாலை பாசறைக்கு திரும்பின. துயரத்திலிருந்த சுந்தரன் அன்று இரவும் வழக்கம் போல மீண்டும் அரசிக்கு மடல் ஒன்றை அனுப்பினான்.

இன்று தளபதி இறந்த செய்திக் கேட்டு அதிர்ந்தாள் அரசி. அரண்மனை வாசலில் தளபதியின் மனைவி தலைவிரி கோலத்துடன் மரியாதைக்கு வைக்கப் பட்டிருந்த தளபதியின் உடல் அருகே அழுதுப் புலம்பிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த அரசியிடம் தளபதியின் மனைவி அழுது ஓலமிட்டாள். நாட்டிற்காக இன்னுயிரை ஈந்தவர் உன் கணவர், நாங்கள் இருக்கிறோம் உனக்கு ஆதரவாக என்று ஆறுதல் சொன்னாள் அரசி. என் கணவன் நாட்டைக் காக்கும் தளபதிப் பொறுப்பை ஏற்றுவிட்டு இப்படி போரிலே வெற்றிக் கொள்ளாமல் நாட்டு மக்களையும் காப்பாற்றாமல் போய்விட்டானே என்பதே என் வருத்தம் அரசியாரே என்றாள் தளபதியின் மனைவி. என் கணவன் போனால் என்ன இந்த நாட்டு மக்களை காப்பாற்ற நம் அரசர் இருக்கிறார் என்றாள் நம்பிக்கையோடு. அரசிக்கு ஆச்சரியம் கலந்த வருத்ததுடன் தளபதியின் மனைவியை நோக்கினாள். இவளுக்கு தான் தன் கணவன் மீதும் நம் நாட்டின் அரசர் மீதும் எவ்வளவு நம்பிக்கை என்று எண்ணி அரசி வியந்தாள். இருந்தாலும் வேறு ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றாள் அரசி.

இந்நிலையில் மன்னர் அனுப்பிய மடலைப் பெற்றுக் கொண்டு படித்தாள் அரசி. மன்னர் இன்றும் தம் நினைவாகவே இருப்பதை உணர்ந்து கொண்டாள். "வாள் பிடித்து போரிடும் போதும் என் கண்ணில் உந்தன் முகம் தான்" என்று மன்னர் எழுதியிருப்பதை பார்த்து மேலும் அச்சமுற்றாள். ஏன் இப்படி நம் கணவர் புரிந்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்கிறார் என்று குழப்படைந்தாள்.மேலும் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தாள். "என் நினைவினை அகற்றி நன்றாகப் போர் புரிந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்" பதிலுக்கு மடலினை காலையில் அனுப்பினாள். அரசனும் காலையிலே அரசியின் மடலை ஆவலாக எதிர்பார்த்திருந்தான். மடல் வந்ததும் ஆர்வத்துடன் பிரித்துப் படித்தான். அரசியின் பதில் ஏமாற்றத்தை அளிப்பதாக உணர்ந்தான். ஏமாற்றத்துடன் ஆர்வமில்லதவனாக போர்க் களத்திற்கு புறப்பட்டான்.

இன்றோ மதுசூதனின் படைகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டனர். முதல் இருநாட்கள் அடைந்த பின்னடைவிற்கு பலத்த பதிலடியாக இன்று திருப்பிக் கொடுத்தனர். முன்னதாக வேங்கைய்யனின் துணைத் தளபதி புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான். சுந்தரனின் படைகள் போர்க் களத்தில் புதிய தளபதியின் வழிநடத்துதலில் ஓரளவிற்கு சாமாளித்தனர். வேங்கைய்யனின் போர்ப் பயிற்சினால் வீரர்கள் அனைவருமே நல்ல திறமையுடன் இருந்ததால் துணைத் தளபதிக்கு சமாளிப்பதற்கு சற்றே எளிதானது. களத்தில் துணைத் தளபதியின் போர் நுணுக்கத்தால் மீண்டும் எழுச்சிப் பெற்றது சுந்தரனின் படைகள். சுந்தரனும் தன் பங்கிற்கு மதுசூதனின் படைகளை ஒரு பக்கம் வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தான். தற்போது இருபடைகளும் மீண்டும் சமபலத்தினை அடைந்தன.

இதற்கிடையே மீண்டும் போரின் நடு நடுவே சுந்தரன் தன் அரசிக்கு ஓலை அனுப்பிய படியே இருந்தான். ஒவ்வொரு முறையும் அவள் முகம் காண வேண்டுமென்று விரும்புவதாகவே ஓலை அனுப்பிக் கொண்டேயிருந்தான். அரசியிடமிருந்து எந்த பதிலும் வராததால் சற்றே ஏமாற்றத்துடனே போர் புரிந்து கொண்டிருந்தான். அப்போது மதுசூதனின் திறமை வாய்ந்த தளபதியினால் சுந்தரன் படையின் துணைத் தளபதி வெட்டி சாய்க்கப் பட்டான். ஆத்திரத்தில் உடனே சுந்தரனும் தன் பங்கிற்கு மதுசூதனின் தளபதியை வெட்டி சாய்த்துவிட்டான். இருந்தாலும் புதிய தளபதியின் மரணம் போர்க் களத்தில் சுந்தரனின் படைகளுக்கு பெருத்த பின்னடைவாகவே ஆனது. தன் தளபதியை இழந்தாலும் மிக உறுதியுடனும் போரிட்டுக் கொண்டிருந்தான் மதுசூதன்.ஒரு கட்டத்தில் மன்னன் சுந்தரனை வளைத்து பிடித்துவிடலாம் என்ற கட்டத்திற்கும் வந்து விட்டான் மதுசூதன். சுந்தரனின் தோல்விக்கு சென்று விட்டானென்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே போர்க் களத்திலிருந்து அரசிடமிருந்து ஓலைகள் வந்த வண்ணமாக இருப்பதை பார்த்து மேலும் வருத்தமும் அச்சமும் உற்றாள் அமிர்தவள்ளி. அவ்வப்போது போர்க் களத்தில் நடக்கின்ற நிலவரங்களையும் உன்னிப்பாக கேட்டு அறிந்து வந்தாள் அரசி. போர்க்களத்தில் புதிய தளபதி வெட்டப் பட்டதையும் தம் மன்னருக்கு ஏற்பட்ட பின்னடைவையும் அறிந்து கொண்டாள் அரசி. மேலும் எதிரி படைகளால் மன்னன் சுந்தரன் சூழப்பட்டுள்ளதையும் அறிந்து துடித்தாள் அரசி.

தன் கணவனை இழந்த பிறகும் தன்னம்பிக்கையோடு இருந்த தளபதி மனைவியின் பேச்சு அரசிக்கு ஞாபகம் வந்தது. அதுபோலத் தானே நம் படையிலுள்ள மற்ற வீரர்களின் மனைவிகளும் தன் கணவர் போரில் வெற்றிப் பெற்று வீடு திரும்புவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் போரில் தோற்றுவிட்டாள் எப்படி ஆறுதல் சொல்வது? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் போரிலே தோற்றுவிடக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டோமல்லவா? அதற்கு மன்னராகிய நம் கணவர் சுந்தரனே பொறுப்பாவாரல்லவா? என் கணவரின் இந்த தோல்விக்கு நானே பொறுப்பாவேனல்லவா? என்னால் தானே என் கணவரால் முழுத் திறமையுடன் போரிட முடியவில்லை? என்று பலவாறாக எண்ணி இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று அரசினிடமிருந்து வந்திருக்கும் ஓலைக்கு பதில் ஓலை தயார் செய்தாள். தன் பணிப்பெண்ணிடம் தான் சொல்லும்படி ஓலையுடன் ஒரு தட்டினையும் சேர்த்து அனுப்ப சொன்னாள். பணிப்பெண் அரசி சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் அதை செய்யவும் மறுத்தாள். பிறகு அரசி கர்ஜித்தாள். சொன்னதைச் செய் இது என் ஆணை என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள் அரசி.

சுந்தரனோ மதுசூதனின் ஆட்களால் தான் சூழப்பட்டிருந்தாலும் அவன் கண்கள் யாரையோ எதிர்பார்த்திருந்தது. ஆம் அவன் எதிர் பார்த்தபடி அரசியிடமிருந்து ஓலை எடுத்து வருபவனைக் கண்டான் சுந்தரன். சிறு ஆனந்தத்தில் தன்னை சுற்றியிருந்தவர்களை துவம்சம் செய்துவிட்டு ஓலையைப் பெற்றுக் கொண்டான். ஓலையுடன் ஒரு பட்டு துணியினால் மூடப்பட்ட தட்டையும் கொண்டு வந்திருந்தான் அவன். மன்னருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அரசன் சற்றே ஒதுங்கினான் ஓலையைப் பிரித்து படித்தான்.

அதில் அமிர்தவள்ளி, " என் சுவாமிக்கு நான் வரையும் கடைசி மடல் இதுவே ஆகும். இப்போதிருக்கும் நிலைமையில் நாம் போரிலே தோற்றுவிடக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டோம். நீங்கள் தளபதிகளை இழந்து எதிரி நாட்டு படையால் சூழப்பட்டுள்ளதை அறிவேன் மன்னா! நம் நாட்டு வீரர்களின் மனைவிகளும் தன் கணவன்மார்கள் போரில் வெற்றிப் பெற்று எப்போது வீடு திரும்புவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். வீரமரணமடைந்த நம் தளபதியின் மனைவி முதல் நாட்டிலுள்ள சின்ன குழுந்தை வரை மன்னராகிய உங்களை மானசீகமாக நம்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் இந்த போரில் தோற்றுவிட்டாள் எப்படி ஆறுதல் சொல்வது? அதற்கு மன்னராகிய என் கணவரே பொறுப்பாவாரல்லவா? என் கணவரின் இந்த தோல்விக்கு நானே பொறுப்பாவேனல்லவா? என்னால் தானே என் கணவரால் முழுத் திறமையுடன் போரிட முடியவில்லை? இதோ என் திருமுகத்தினைப் பார்க்காததால் தானே மன்னா உங்களால் சரியாகப் போரிட முடியவில்லை, இதோ என் திருமுகத்தினை வெட்டி தங்களுக்காக போர்க் களத்திற்கே அனுப்பி விட்டேன், இதோ அந்த தட்டில் உள்ளது, நன்றாகப் பார்த்துக கொள்ளுங்கள் மன்னா, என் முகத்தினை பார்த்த திருப்தியோடு, இனியாவது நன்றாகப் போரிட்டு நாட்டையும், தங்களை நம்பியுள்ள நாட்டு மக்களையும் காப்பாயாக, இல்லையேல் நீங்கள் வீரமரணமடைந்தால் தங்களை வரவேற்க நான் உங்களுக்காக சொர்க்கத்தில் காத்திருப்பேன் இப்படிக்கு தங்கள் அன்பு மனைவி அமிர்தவள்ளி" என்று எழுதியிருந்ததை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போனான் சுந்தரன்.

அவசரமாக அந்த தட்டிலிலுள்ள பட்டு துணியினை தூக்கி எறிந்தான். அதில் தன் மனைவியின் திருமுகத்தினை கண்டவுடன் குலுங்கி குலுங்கி அழுதான். சொல்லெண்ணா துயரத்தில் ஆழ்ந்தான். ஆத்திரமும் வெறியும் கொண்டு பத்து ருத்ரன் ஒன்று சேர்ந்தார் போல் சினங்கொண்டு மதுசூதனின் படைகளை வெறித்தனமாக தாக்கினான். ருத்ரன் ஊழி தாண்டவத்தில் நடனமாடுவது போன்று சுழன்று சுழன்று மதுசூதனின் படைகளை சின்னா பின்னமாக்கி கொண்டிருந்தான். கண்ணில் பட்ட தலைகளை எல்லாம் வெட்டி சாய்த்து கொண்டேயிருந்தான். அவன் கைகளோ ஓய்வெடுப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து வெட்டி கொண்டேயிருந்தான். ஆயிரம் தலைகளில் ஒரு தலையாக மன்னன் மதுசூதனின் தலையையும் வெட்டி சாய்த்துவிட்டிருந்தான், ஆனால் அது அவனுகே தெரியவில்லை.

ஆனால் சுந்தரனோ தொடர்ந்து கத்தியை சுழற்றிக் கொண்டேயிருந்தான். மன்னன் மதுசூதனை நம் மன்னர் சுந்தரன் வெட்டி சாய்த்துவிட்டதையறிந்து படை வீரர்கள் மகிழ்ச்சியில் ஒரே ஆரவாரமிட்டனர். மன்னன் இப்போது தான் உணர்ந்தான், ஆம் நாம் போரினில் வெற்றிப் பெற்றுவிட்டோம். என் அமிர்தவள்ளி வெற்றி பெற வைத்துவிட்டாள். அவளுக்காக் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நான் காப்பாற்றி விட்டேன் என்று கூறிக் கொண்டே மண்டியிட்டு தன் தலையை தானே துண்டித்துக் கொண்டு மண்ணில் வீழ்ந்தான் சுந்தரன் என்று கதையைக் கூறி முடித்தாள் குழலி.

கதையைக் கேட்டு அய்யோ! என்று அலறினான் முகுந்தன். இப்போது சொல் நீ உன் கடமையை செய்யாமல் என்னை வந்து வந்து பார்ப்பதும் நினைத்துக் கொண்டிருப்பதும் சரியா? என்று கேட்டாள் குழலி.

முகுந்தனும் தன் தவறை உணர்ந்து, தன் தவறை மிக சமார்த்தியமாக சுட்டிக் காட்டிய குழலி அவன் கண்களுக்கு இன்னொரு அமிர்தவள்ளியாக தெரிந்தாள்.

முகுந்தன் தன் தவறை உணர்ந்ததை தெரிந்து கொண்ட குழலி, அது சரி அத்தனை மணி நேரமும் என்னையே நீ பார்த்துக் கொண்டிருப்பதை எப்படி அந்த ஆசிரியர் உன்னை கண்டிக்காமல் விட்டார் என்று கேட்டாள் குழலி. அது ரகசியம் என்று பலமாக சிரித்து விட்டு ஓடினான் முகுந்தன்.


ஜோதிடக் குறிப்பு :- 


காதலால் புத்தி மழுங்குதல் என்பது எல்லாக் காலக்கட்டங்களில் அடிக்கடி நாம் பார்ப்பதுண்டு, கேட்பதுண்டு. லக்னத்திற்கு 7மிடம் தான் திருமணம் மற்றும் காதல் வயப்படுதலைப் பற்றி சொல்வதாகும். சுக்கிரன் மற்றும் சந்திரனின் இருப்பிடம் மற்றும் சேர்க்கைகளைக் கொண்டு ஒரு மனிதன் தான் கொள்ளும் காதலால் எந்தவிதமான இன்ப துன்பங்களை அடைகிறான் என்று அறியலாம். ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் அமர்வது, 7மிடத்து அதிபதியுடன் ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, சுக்கிரன் எட்டில் அமர்வது, போன்ற அமைப்புகளால் ஒரு ஜாதகன் தான் கொள்ளும் காதலால் மதியிழந்து செய்வது என்ன செய்கிறோமென்று தெரியாமல் குழம்பி ஒரு குறிப்பிட்ட காலக் கட்டம் வரை காதல் மயக்கத்தில் லயித்திருப்பான். அந்த சம்பந்தபட்ட கோள்களின் திசாப் புத்திகளை கடக்கும் வரை இந்த காதல் பித்தம் நீங்குவதில்லை.

பூக்கள் மலரும்.....

புதன், 9 பிப்ரவரி, 2011

பின்யோக ஜாதகம்


     ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வையும் சில கட்டங்களாக நாம் பிரித்து விடலாம். அதாவது நம்ம ரஜினி பாட்ஷா படத்தில வருகிற பாடல் மாதிரி "எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க நினைச்சுக்கோ". ரொம்ப அர்த்தமுள்ள பாடல் தாங்க இது.அது மாதிரி தான் மனித வாழ்க்கையையும் பகுதிகளாக/கட்டங்களாக பிரித்து கொள்ளலாம்.

நம்ம வீட்ல இருக்கிற பெரியவங்களே நம்மகிட்ட சொல்லி நாம கேட்டிருப்போம். "நான் என்னுடைய 25 வயசுல எவ்வளவு கஷ்டபட்டேன்னு உனக்கு தெரியுமா? ஒரு வேளை சோத்துக்கே வழியில்ல... குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விட்டது... ஏழரை சனியில எவ்வளவு கஷ்டபட்டேன்னு உனக்கு தெரியுமா...? இப்படி அவங்க கஷ்டங்களையும் சொல்லி அதற்கு பிறகு இத்தனை வயதிற்கு அப்பறமா தான் நாம தலையெடுத்தோம்ன்னு சொல்லறதை நாம நிறைய கேட்டிருப்போம்". இதிலிருந்து அவங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை கஷ்டத்தை அனுபவித்ததும் பிறகே ஒரு யோகமான வாழ்க்கை வாழ்ந்திருப்பதும் தெள்ள தெளிவாக விளங்கும்.

அது என்னங்க பின்யோக ஜாதகம்? அப்படின்னு கேட்கறீங்களா?
இதை ரொம்ப எளிதாக புரிய வைக்கணும்னா, அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நான் அடிக்கடி சொல்வது எம்.ஜி.ஆர்., வடிவேலு, மற்றும் இயக்குநர் ஷங்கர். என்னங்க இவங்க மட்டும் தானா என்று கேட்காதீங்க. அந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க. இவங்க சினிமா நட்சத்திரங்கள் என்பதால இவங்களைப் பற்றி பெரிதாக உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை. இவங்களெல்லாம் வாழ்க்கையில் தங்களுடைய முதல் பகுதியை வறுமையும், கஷ்டங்களாகவும் தான் கழித்தார்கள் என்று சொல்லலாம். பெரும் போராட்டங்களையும், கஷ்டங்களையும் கடந்து ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் இவர்கள் தங்களுடைய திரைத் துறையில் சாதித்தனர். அது வரை இவர்களிடமிருந்த திறமைக்கு யாரும் தீனிப் போடவில்லை என்பதே உண்மை. சாதிக்க வேண்டுமென்கின்ற வெறி, திறமை, கடின உழைப்பு இவைகளெல்லாம் தான் இவர்களை இந்த உயரமான இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அது உண்மையும் கூட.

என்னதான் திறமை இருந்தாலும் அதுக்கென்று ஒரு அதிர்ஷ்டமிருக்கணும்யா என்று நாம் பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆமாங்க அதைத் தான் நான் இந்த இடத்திலே சொல்ல வந்தது. இவங்க இந்த உயரத்திற்கு வருவதற்கு முன்னாடியும் இவங்களிடத்தில் அதே திறமையும், கடின உழைப்பும் இருந்தது தான். ஆனால் அந்த காலக் கட்டங்களில் அவர்களால் ஏன் ஜொலிக்க முடியவில்லை. ஆம் அது தான் "காலம்" என்கிற அதிர்ஷ்டம். காலத்திற்கு ஏற்ற யோகமான திசா புத்திகள் வரும் போது இவர்களுக்கு அதிர்ஷ்டமும் கைக்கூடி வந்திருக்கிறது. ஏன் இவர்களை விட திறமையானவர்களும் இதே துறையில் இருந்திருக்கலாம்... அவர்கள் வெளியே தெரியாமல் இறந்தும் கூட போயிருக்கலாம். அதற்கு காரணம் "காலம்" என்கிற அதிர்ஷ்டம் அவர்களை தொடாமலே போயிருந்திருக்க கூடும்.

எம்.ஜி.ஆர். முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் போது அவருக்கு வயது 39. இந்த வயதிற்கு பிறகு தான் திரைத்துறையின் உச்சாணி கொம்பிற்கே சென்றார். காலத்தால் அழியாப் புகழ்ப் பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாவற்றையும் தான் விரும்பியவாறு தன்னுடைய பின் வயதில் தான் அனுபவித்தார்.

வடிவேலும், திரை துறையில் சொல்லிக் கொள்ளும் படி நடிக்க ஆரம்பித்ததே அவருடைய 40 வயதிற்கு மேல் தான் எனச் சொல்லலாம். அதன் பிறகே தன்னுடைய வறுமை நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து புதிய வாழ்கையை சகல விதமான வசதிகளுடன் தான் விரும்பியவாறு வாழ ஆரம்பித்தார்.

இயக்குநர் ஷங்கர் தன்னுடைய 30 வயதிற்கு மேல் தான் தனியாக படம் இயக்க ஆரம்பித்தார். அதன் பிறகே திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். இன்று மிக உயரமான இடத்தில் அமர்ந்துள்ளார்.

கண்டிப்பாக இந்த மூவரையும் நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்கவில்லை. இவர்கள் மூவருமே தங்களுடைய வாழ்கையில் முன் வயதில் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தங்களுடைய பின் பாதியில் தான் யோகமான வாழ்க்கையை பெற்றவர்கள்.
அதாவது யோகங்களை பின்னால் அனுபவிக்கும் ஜாதகத்தை தான் பின் யோக ஜாதகம் என்று கூறுவர். பெரும்பாலும் 30 வயதிற்கு மேல், அதாவது சிலருக்கு 32, 36, 40 வயதிற்கு மேல் தான் அவர்களுடைய ஜாதகமே பேசும் எனலாம். அதே போல் ஒருத்தன் நல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் போது "அவனுக்கு சுக்கிர திசை அடிச்சிருச்சி" ன்னு அடிக்கடி சொல்வதை நாம் நிறைய கேட்டிருப்போம். ஆமாங்க அது பின் வயதில் வருகிற சுக்கிர திசைன்னா கண்டிப்பா அது யோகமான தான் இருக்கும்.

பெரும்பாலும் மீன ராசிக்காரர்கள் பின் யோக ஜாதகர்கள் தான். அவர்களுக்கு முன் பகுதி நிறைய சோதனைகள் நிறைந்த வாழ்கையாகத் தான் இருக்கும். ஒரு சில ஜாதகர்கள் இளம் வயதிலேயே யோகங்களை அனுபவிக்கும் அமைப்பினைப் பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பின் வயதில் அவர்கள் கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்திப்பவர்களாக இருப்பார்கள்.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான நற்பலன்களை மட்டுமோ அல்லது தீய பலன்களை மட்டுமோ அனுபவிப்பார்கள் என்று கிடையாது. கிரகங்கள் தங்களின் ஆளுமைகளை மனிதர்களின் மேல் செலுத்துவதைப் பொறுத்து தான் பலன்கள் நிச்சயம் மாறுகின்றன.

பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனால் இன்று பெரும்பாலனாவர்கள் தங்களுடைய வாழ்வினை விட்டில் பூச்சி போல் உடனடியாக எல்லா சுகங்களை அனுபவித்து வாழ்ந்து விடவேண்டும் என்று துடிப்பதை நாம் காண முடிகிறது. அப்படியில்லாமல் பொறுத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கான நேரம் வந்தால் அப்போது உலகமே உங்களுக்காக படைக்கப் பட்டதைப் போன்று உணருவீர்கள். பெரும்பாலான பின்யோக ஜாதகக்காரர்கள் சரித்திரத்தில் நீங்கா புகழொடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் மாற்ற முடியாத உண்மை.

பூக்கள் மலரும்....

திங்கள், 7 பிப்ரவரி, 2011

கஜகேசரி யோகம்


கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம்.

இந்த யோகத்தை சுலபமாக சொல்லணும்னா எம். ஜி. ஆர். படத்தில வருகிற புகழ் பெற்ற வசனம் தான் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருகிறது.



ஆம், இந்த வசனத்தின் பொருள் தான் இந்த யோகத்தின் பலனும் கூட. அதாவது ஒரு மதம் கொண்ட யானை எவ்வளவு துன்பத்தை கொடுக்க கூடியது என்பதை நாம் நன்றாக அறிவோம். அந்த மதம் கொண்ட யானையே ஒரு சினம் கொண்ட சிங்கத்தை கண்டால் தெரித்து ஓடி விடும் என்பது தான் இதன் பொருள். அதுபோலத் தான் இந்த கஜகேசரி யோகம் மட்டும் ஒரு ஜாதகத்திலிருந்து விட்டால் அது எவ்வளவு துன்பத்தை விளைவிக்க கூடிய மதம் கொண்ட யானை போன்ற கெட்ட யோகங்கள் இருந்தாலும் கூட அவற்றை விரட்டியடித்து நற்பலன்களை அந்த ஜாதகருக்கு வாரி வழங்கும் என்பதே உண்மை.

ஒரு ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7, 10 இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு நிற்க, குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றால், நின்ற அந்த 1,4,7,10 இடங்கள் சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின் அது கஜகேசரி யோகமாகும்.

ஜோதிடப் பாடல்

வருசசி கேந்தி ரத்தில்
     மன்னவன் நிற்க
அரசன்தன் கேந்தி ரத்தில்
     அம்புலிதானும் நிற்க
விரவுமற் றிடத்தின் மற்றோர்
     மேவிய தோஷம் யானை
உறுசிங்கம் கண்டவாறாம்
      ஓது கேசரி யோகம்

மற்றொரு பாடல்
"இந்திருக்கும் லக்கினகேந் திரத்தில் பொன்
இருங்கசகே சரியோகம்"

பொதுவாக இந்த யோகம் ஜோதிடத்தில் மிக உயர்ந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்த கஜகேசரி யோகமுள்ள ஒரு ஜாதகர் ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட தரித்திர சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை மீட்டு கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகத்தில் பிறந்த அந்த ஜாதகருக்கு நிச்சயமிருக்கும்.



பூக்கள் மலரும்.....
**********************************************************************************

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ராஜாவும் ஆண்டியும்!


ஒரு நாட்டின் ராஜா தன் நாட்டை மிகத் திறமையாக ஆண்டு வந்தான். அவன் அந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். நாட்டிலே மக்கள் எல்லோரும் செல்வ செழிப்போடு பசி பட்டினி இல்லாமல் நன்றாக வாழ்ந்து வந்தனர்.  நல்ல உடை, நல்ல தானிய விருத்தி என்று எல்லா வகையிலும் தன்னிறைவு கண்டு நாட்டை ஆண்டு வந்தான். சிறிய நாடு என்றாலும் மக்களோட ஆதரவைப் பெற்று நன்றாகவே ஆண்டு வந்தான். அவனுடைய கஜானாவும் நிரம்பி வழிந்தது. சகல வசதிகளுடன் ராஜா நன்றாகவே அந்த அரண்மனையில் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனுக்கோ அந்த பாழாய் போன தூக்கம் மட்டும் இல்லாமல் நெடு நாளாய் தவித்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் ராஜா தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். அப்போது காட்டில் அந்த வழியாக ஒரு மானை ஒரு சிங்கம் வேட்டையாட நினைத்து துரத்தி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட வந்த மந்திரி, "அரசே! நாம் சென்று விடலாம் இல்லையேல் நாம் இந்த சிங்கத்திடன் மாட்டிக் கொண்டு விடுவோம். இந்த மானிற் பதிலாக நாம் இரையாகி விடுவோம்". என்று எச்சரித்தார். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தாமல், "அது வீரனுக்கு அழகல்ல! அந்த சிங்கத்திற்கு முன்பாக நாம் தான் அந்த மானை வேட்டையாட வேண்டும், இது என் கட்டளை ம்ம்ம் பிடியுங்கள்" என்றார். வேறு வழியின்றி ராஜாவின் உத்தரவை மற்றவர்கள் நிறைவேற்ற எத்தனித்தனர். சிங்கத்தோடு சேர்ந்து ராஜாவும் அவரது பரிவாரங்களும் அந்த மானை துரத்த ஆரம்பித்தனர். சிங்கத்தினை பயமுறுத்த என்னென்ன வழிகளுண்டோ அத்தனையும் பிரயோகப்படுத்தினர். ஒரு வழியாக அந்த சிங்கம் இவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடி விட்டது. பின்னர் அந்த மானோ இவர்களைக் கண்டு ஓட ஆரம்பித்தது.

அந்த மானை விடாமல் இவர்களும் துரத்தினர். அது ஓடி ஓடி அங்குள்ள ஒரு ஆசிரமக் குடிலுக்குள் சென்று விட்டது. மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த எழில் கொஞ்சும் சோலைக்குள் ராஜாவும் அவரது பரிவாரங்களும் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து மானைத் தேட ஆரம்பித்தனர். அந்த மான் அங்குள்ள ஒரு ஆண்டியிடம் சரணைடைந்திருந்தது. அந்த ஆண்டியோ நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தார். அந்த ராஜாவுக்கோ எப்படியாவது அந்த மானை பிடித்துவிட வேண்டுமென்று அவா எனவே தன் பரிவாரங்களுக்கு கட்டளையிட்டான், "ம்ம்ம் பிடித்து வாருங்கள் என்றான்". அப்போது ஒரு சேவகன் முன்னே சென்று அந்த மானைப் பிடிக்க சென்றான். மானின் குரல் கேட்டு அதுவரை நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த அந்த ஆண்டி விழித்து விட்டார். அந்த ஆண்டி அப்போது "நில்" என்றார். வந்திருப்பவர்கள் யார் என்பதினையும் ஆண்டி அறிந்து கொண்டார். அதேபோல் ராஜாவும் ஆண்டியை சில கண நேரம் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஆண்டி, "குடிலுக்குள் வந்த மான் இன்றிலிருந்து எனக்கே சொந்தம்" என்று சொன்னார். மேலும் எந்தவொரு ஜீவனும் தஞ்சம் என்று வந்துவிட்டால் அதற்கு பாதுகாப்பு அளிப்பது நம் கடமை, அந்த வகையில் இந்த மானைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையே. இந்த மானை வேட்டையாட உங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்றார் பணிவுடன். ராஜாவோ அது எப்படி மானை என்னிடம் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றான். ஆனால் ஆண்டியோ நீங்கள் போகலாம் என்றார். ராஜாவோ மறுப்பு எதுவும் சொல்லாமல் தன் பரிவாரங்களுடன் அரண்மனைக்கு திரும்பினார்.


அன்றிரவும் ராஜாவுக்கோ வழக்கம் போல உறக்கம் வரவேயில்லை. ராஜாவோ ஆண்டியைப் நினைத்துப் பார்த்தான். அந்த ஆண்டியின் சாந்தமும், நாம் வரும்போது அவர் எந்த கவலையுமில்லாமல் உறங்கி கொண்டிருந்த தன்மையும், அதுமட்டுமில்லாமல் தான் ஒரு ராஜா என்பதை அறிந்தபிறகும் அவரிடம் எந்தவித மாற்றமும் இல்லாமல் தன்னை மறுத்து பேசியதும், மேலும் அந்த ஆண்டியின் பேச்சை மறுத்துப் பேசமுடியாமல் தான் அரண்மனை திரும்பியதும் ராஜாவிற்கோ வியப்பினை உண்டு பண்ணியது. நான் ஒரு ராஜா, இங்கே பட்டு மேத்தையில் அரண்மனையில் சகலவிதமான சவுகரியங்களுடன் இருந்தாலும் நான் பெரும்பாலான நேரங்களில் சரியாக உறங்கியதே இல்லை. ஆனால் நான் இன்று கண்ட அந்த காட்சி, அந்த ஆண்டி நாம் அங்கே சென்றபோது அவர் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்ததும், அவரிடம் இருந்த அந்த சாந்தமும், அந்த பூத்துக் குலுங்கும் சோலையும் மன்னன் நெஞ்சை விட்டு அகலவில்லை. 

பொழுதும் புலர்ந்தது. மன்னன் எழுந்தவுடன் நேராக அந்த காட்டிலுள்ள குடிலை நோக்கி பிராயணிக்கலானான். ராஜா அந்த ஆண்டியை கண்டான். அந்த ஆண்டியோ தன் காலை உணவிற்காக அங்குள்ள மரங்களிலுள்ள பழங்களை பறித்து கொண்டிருந்தார். ராஜாவை கண்டவுடன் என்ன ராஜனே மீண்டும் மானை பிடிக்க வந்தாயோ? என்றார். ஐய்யா நிச்சயமாக இல்லை. நானோ ஒரு ராஜன். எனக்கென்று அரண்மனையுண்டு சகல வசதிகளும் உண்டு. ஆனால் எனக்கோ சரியாக உறக்கம் மட்டும் வருவதேயில்லை ஆனால் நீங்களோ குடிலில் எந்தவிதமான பெரிய வசதிகளுமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள். இது எப்படி சாத்தியம். நானோ பட்டு மெத்தையில் படுத்தும் கூட எனக்கு உறக்கம் வரவில்லை. ஆனால் நீங்களோ கட்டாந்தரையில் படுத்து நன்றாக உறங்குகிறீர்கள். அது தான் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. அதை தான் உங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு போகலாமென்று நான் இங்கே வந்தேன்.ஆண்டியோ சிறு புன்முறுவலுடன் ராஜனை நோக்கினார். சரி சொல்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை இந்த மயில் தோகைக் கட்டினை நான் சொல்லும் வரை நீர் சுமந்து கொண்டிருக்க வேண்டும். நீர் இதை கீழே வைத்துவிட்டால் நீ தேடி வந்த விடையை என்னிடமிருந்து பெற முடியாது. ராஜா சற்றே யோசித்துவிட்டு, மயில் தோகைத் தானே இதிலென்ன பெரிய கஷ்டமிருக்கப் போகிறதென்று ஒப்புகொண்டான். ஆண்டியோ சொல்லிவிட்டு தன்னுடைய வேலைகளைப் பார்க்க தொடங்கி விட்டார். ராஜாவிற்கு முதலில் 2 நாழிகை எளிதாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல சற்றே கையில் வலியை உணர முடிந்தது. உச்சியும் வந்தது. ஆண்டியோ மதியம் சாப்பாட்டினை முடித்துவிட்டு ஒரு குட்டி தூக்கமும் போட்டுவிட்டு எழுந்தார். ராஜா சற்றே எரிச்சலுடன் ஐய்யா என்ன இது ஒரு ராஜாவை இப்படி தான் நீங்கள் நடத்துவதா? என்று வினா எழுப்பினார். நீங்கள் தேடிய விடைக் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் பொறுத்துதான் ஆக வேண்டும் என்றார் ஆண்டி. நேரம் செல்ல இருளும் படர ஆரம்பித்தது. ஆனால் ஆண்டியோ ராஜாவை கண்டுகொள்ளவேவில்லை. இரவு ஆகாரத்தையும் அருந்தி விட்டு ஆண்டியோ படுத்துக் கொண்டுவிட்டார். ராஜாவிற்கோ வலிப்பொறுக்க முடியாமல் கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது. உறங்க சென்ற ஆண்டியை ராஜா எழுப்பினார். ஐய்யா என்னை நாள் முழுவதும் மயில் தோகையை சுமக்க செய்து இந்த நாட்டின் ராஜாவை இழிவுப்படுத்திவிட்டான் இந்த ஆண்டி என்ற தீராப் பழியை உண்டுபண்ணுவது தான் உங்கள் மிக உயர்ந்த எண்ணமா? என்ற ஆத்திரத்தில் ராஜா கத்தினான். இப்போது ஆண்டி மெல்ல வாய் திறந்தார். 

பிறகு சொல்லலானார், ஏ ராஜாவே! நீ ராஜான், நீ நாட்டு மக்களைப் பற்றி அதிகம் யோசிக்கிறாய். மக்களை எப்படி காப்பது? எப்போது எந்த நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருவான், அவர்களிடமிருந்து எப்படி தம்மை தற்காத்து கொள்வது?. நாட்டின் கஜானா நிரம்பி வழிகிறது அதை எப்படி காப்பாற்றுவது? நாட்டில் களவு, கொலை இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி? நாட்டு மக்களுக்காக என்ன நல்ல திட்டங்கள் செய்யலாம்? என்று நாள்தோறும் கணந்தோறும் விடாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய். அவையெல்லாம் என் கடமைதானே என்று சொல்லலாம். அது உண்மையும் கூட. இந்த கடமைகள் எல்லாம் ராஜானாகிய உனக்கு மயில் தோகையைப் போன்றதே ஆகும். இந்த மயில் தோகையை தான் தினமும் நீர் சுமந்து கொண்டு உன்னுடைய மாட மாளிகையிலுள்ள பட்டு மெத்தைக்கு உறங்க செல்கிறாய். இத்தனைப் பாரங்களையும் சுமந்து கொண்டு படுக்க்க்கு செல்லும்போது உங்களுக்கு எங்கே தூக்கம்வரும். மாறாக வலிதான் கிட்டும்.


ஆனால் என்னுடைய குடிலைப் பாருங்கள். இதில் களவுப் போவதற்கானப் பொருள் எதுவுமே இல்லை. நான் உண்பது எல்லாம் இயற்கை எனக்கு அளித்த பழங்கள் தான். எனக்கு என்று சில ஆடைகள் மற்றும் இந்த போர்வை மட்டும் தான். நான் உறங்க செல்லும் போது இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிவிட்டு தான் படுக்க செல்லுகிறேன். இன்று நடந்த அத்தனை கருமங்களுக்கும் இறைவனிடத்தில் நன்றி தெரிவித்துவிட்டு தவறுகள் இருந்தால் மன்னிப்பும் கேட்டுவிட்டு தான் உறங்க செல்லுகிறேன். அதாவது மயில்தோகை என்னும் பாரத்தினை இறைவனின் பாதத்தில் இறக்கி வைத்துவிடுகிறேன். அதனால் தான் என்னால் எளிதாக உறங்க முடிகிறது. அது போல நீங்களும் உங்கள் மயில்தோகை எனும் பாரத்தினை இறைவனிடத்தில் இறக்கி வைத்துவிட்டு உறங்க செல்லுங்கள். வேண்டுமென்றால் மீண்டும் அதை காலையில் எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுக்கு உறக்கம் வரும்.

நேரம் செல்ல செல்ல இந்த மயில் தோகைக் கூட பாரமாகும் என்பது உங்களுக்கு புரிய வைக்கவே நான் உங்களை இந்த நாள் முழுவதும் அதனை சுமக்க செய்து உணரச் செய்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள் மன்னா! என்று ஆண்டி மன்னிப்பு கேட்டார். மன்னன் தன் ஞானக்கண்ணை திறந்த ஆண்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் பாரத்தை இறக்கி வைக்கும் வழியை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மீண்டும் அரண்மனை நோக்கி பயணிக்கலானான்.

ஜோதிடக் கருத்து

ஒரு ஜாதகத்தில் சயன சுகமென்பது 12மிடம். அந்த இடத்தின் அதிபன் பாபருடன் கூடினாலோ அல்லது பாவ கிரகத்தினால் பார்க்கப் பட்டாலோ நிச்சயம் அந்த ஜாதகருக்கு சரியான உறக்கமின்றி தவிப்பார். அதேசமயம் 12டமிடத்து அதிபர் தன் சொந்த வீட்டில் அமர்ந்து பாவ கிரகங்களின் சேர்க்கை இல்லாமிலிருந்தால் மிக நன்றாக உறங்க கூடியவராவர்.சில பேருக்கு படுத்ததும் உறக்கம் வந்துவிடும் இவர்கள் அந்த வகையை சேர்ந்தவராக இருப்பர்.12ல் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைவதும் சயன சுகத்தினை நன்றாக கொடுத்திடும்.

பூக்கள் மலரும்......