இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் தான். ஊழல் செய்துவிட்டு வெட்கமில்லாமல் எதற்கும் அச்சப்படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை பார்க்கும் நேர்மையாளர்களுக்கு ரத்தம் கொதிக்க தான் செய்கிறது.
ஆனால், எல்லாருக்கும் ஒரே ஒரு சந்தேகம் தான் தோன்றுகிறது. "இவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப் படுவதில்லையே?, தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்களே?" என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்கிறது.
இவர்களுக்கு யார் தான் சரியான தண்டனை வாங்கித் தரப் போகிறார்களோ? என்று அங்கே அங்கே கூக்குரல் எழுவதை கேட்பதுண்டு. உண்மையிலேயே இவர்களுக்கு யார் தண்டனை தர வேண்டும்? அந்த ஆண்டவன் தான் தண்டனை தர வேண்டும் என்று எல்லோரும் சொல்வதுண்டு.
ஆம், உண்மை தான் அந்த ஆண்டவன் தான் தண்டனை தர வேண்டும். ஆனால் ஆண்டவன் இந்தப் பணியை நேராகத் தானே செய்வதில்லை. அதற்கு தகுந்த ஒரு கிரகத்தினை அப்பாயிண்ட் செய்திருக்கிறார். ஆம், அவர்தான் இந்த சனீஸ்வர பகவான்.
துலா ராசியில் உச்சம் பெறும் சனி பகவான், துலாப் பாரத்தினை கையில் கொண்டிருக்கும் நீதித் தேவதைப் போல பாரபட்சமின்றி, பாவத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்காமல் விட மாட்டார். இறைவனே! ஆனாலும் அவர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை உடையவர். அதனால் தான் "ஈஸ்வர" பட்டம் பெற்ற சனி பகவானை கண்டு அனைவரும் அஞ்சுவார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் சனிப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. சனி பகவான் கன்னியிலிருந்து, துலாத்திற்கு மாறப் போகிறார். அதாவது தனது உச்ச வீட்டில் சஞ்சரிக்க போகிறார். இந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய தண்டனைகளை எல்லாம் கொடுத்து நியாத்தினை உலகத்தில் நிலை நாட்டப் போகிறார். ஆம், சனி பகவான் தவறு செய்தவர்களுக்கெல்லாம், எல்லாரும் வியக்கும் படியான தண்டனையை அளித்து உலகத்திற்கு ஆச்சரிய மூட்ட வருகிறார்.
இது உலகம் முழுக்க அரங்கேறப் போகிறது. இந்தியா மட்டும் என்ன விதி விலக்கா என்ன? ஆம், இந்தியாவில் ஊழல்களை சாதாரணமாக செய்துவிட்டு, பண பலத்தால் அனைவரையும் மிரட்டி கொண்டு, தனி ராஜாங்கம் நடத்தி வந்த அத்தனை ஊழல்வாதிகளும், சட்டத்திற்கும், நீதிக்கும் பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது. அடுத்த வரப் போகிற இரண்டரை ஆண்டுகளில் பெருமபாலான ஊழல் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க போவதை மக்களாகிய நாம் கண்கூடாக பார்க்கப் போகிறோம்.
நம்ம சனி பகவான் சிம்மத்திலிருந்த காலத்திலிருந்தே ஊழலுக்கு எதிரான நீதியை நிலைநாட்டும் பணியை தொடங்கிவிட்டார். எப்படி என்கிறீர்களா? ஆம் சிம்மத்திலிருந்த போதே தனது மூன்றாம் பார்வையால் துலா ராசியை பார்த்தார். அந்த கால கட்டங்களிலிருந்தே ஊழல் சம்பந்தமான அனைத்தையும் வெளிக் கொணரும் பணியினை செவ்வனே செய்துக் கொண்டுத் தானிருக்கிறார். இதோ இந்த ஆண்டு இறுதியில் துலா ராசிக்கு சனி பகவான் மாறப் போகிறார். ஆணவக்காரர்களாக இருந்த பலரும் வீழப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
மக்களோடு மக்களாக நானும் அந்த வியக்கத் தக்க தண்டனைகளை காண மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். அடுத்து வரப் போகிற தலைமுறைக்கு இந்த தண்டனைகள் எல்லாம் ஒரு பாடமாக என்றும் நினைவில் இருக்கப் போகிறது. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். ஆம் நம் சனி பகவான், மெதுவாக நகருபவர். எனவே தான் தண்டனைகள் மெதுவாக கிடைக்கின்றன. அவருக்கு உரிய நேரம் வரும்போது, பாவத்திற்கு தக்க தண்டனையை வழங்கி நேர்மையை நிலை நாட்டுவார்.
பணத்தால் நிச்சயமாக நம் சனி பகவானை யாரும் விலைக்கு வாங்க முடியாது. ஊழலால் உண்டான செல்வம் பல்கிப் பெருகுவது போல் பெருகி பின் குன்றிவிடும் என்பது அய்யனின் வாக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம்!!!!